தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. தற்போது 'மறந்தேன் மன்னித்தேன்' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மணிரத்னத்தின் 'கடல்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவர் கூறியதாவது: தயாரிப்பு, நடிப்பு இரண்டும் அப்பா கற்றுக் கொடுத்ததுதான். தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்' முதல் படம். 1986ம் ஆண்டு கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் இறந்தனர். அந்த விபத்துக்குள் ஒரு காதலும் இருந்தது. அதுதான் படத்தின் கதை. ஹாலிவுட் 'டைட்டானிக்' மாதிரியான கதை. இதற்காக கோதாவரி ஆற்றில் தொடர்ந்து பத்து நாட்கள் கழுத்தளவு தண்ணீரில் நானும் ஆதியும் நடித்தோம். இன்னும் 25 நாட்கள் நடிக்க வேண்டியது இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்து வருகிறேன். தூத்துக்குடியில் பிறந்து காஞ்சிபுரத்தில் புடவை விற்கிற பெண்ணாக நடிக்கிறேன். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு தமிழில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். 'பருத்தி வீரன்', 'சுப்பிரமணியபுரம்' படங்களை பார்த்துவிட்டு இந்தப் படங்களில் நடிக்கவில்லையே என்று ஏங்கி இருக்கிறேன். அதுபோன்ற கதையம்சமுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. படங்களையும் தொடர்ந்து தயாரிப்பேன். நடிப்பும், தயாரிப்பும் இரு கண்கள்.
Post a Comment