பெப்சி உண்ணாவிரதம்... அனுமதி கிடைக்குமா?

|


சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பெப்சி நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காமல் இருப்பதால், அடுத்து என்ன செய்வது என யோசித்து வருகின்றனர் நிர்வாகிகள்.

திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தன்னிச்சையாக சம்பள உயர்வு பட்டியலையும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இதனால் தயாரிப்பாளர் சங்கம், பெப்சியுடன் உள்ள உறவை துண்டித்துள்ளது. தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல் தொழிலாளர்கள் வைத்து படத்தை எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவித்து உள்ளது. இதற்கிடையில் சம்பளத்தை உயர்த்திதராத படங்களில் வேலை செய்ய தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் உள்ளூர், வெளியூர்களில் நடந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. சூர்யா, ஜீவா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்கள் படங்களும் முடங்கியது. தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ரகசியமாக நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 படங்கள் பாதிப்பு

போராட்டம் நீடிப்பதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பில் உள்ளனர். சுமார் 50 படங்களின் படப்பிடிப்புகள் முடங்கி யுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பெப்சி சங்கத்தினர் சம்பள உயர்வு கேட்டு குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். எம்.ஜி.ஆர். சமாதி முன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கின்றனர்.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கமாட்டார்கள் என தெரிகிறது. அடுத்தவாரம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்தப் பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு சமாதானப்படுத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 

Post a Comment