பெப்சி-தயாரிப்பாளர் பிரச்சினையைத் தீர்க்க குழு-பாரதிராஜா

|


திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க, இயக்குநர்கள் சங்கம் சார்பில் குழு அமைக்கப்படும் என்று பாரதிராஜா அறிவித்துள்ளார்..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையில் நிலவும் குழப்பமான பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காண, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம், சென்னை பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க தலைவர் டைரக்டர் பாரதிராஜா தலைமை தாங்கினார். செயலாளர் அமீர், துணைத்தலைவர் சேரன், பொருளாளர் ஜனநாதன், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களாக பாலுமகேந்திரா, பாக்யராஜ், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், ஏ.வெங்கடேஷ், டி.கே.சண்முகசுந்தரம், சுந்தர் சி, வெற்றிமாறன், பாண்டியராஜன், மாதேஷ், சுசீந்திரன், சீனுராமசாமி, கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனம் இவற்றுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஊதிய பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு ஏற்பட, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நடுநிலை வகித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு தொழிலாளர்கள் சம்மேளனத்துடனும், தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும் தனித்தனியாகவும், கூட்டாகவும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான நல்ல முடிவுகளை உருவாக்கும் என்றார்.
 

Post a Comment