காமெடி சந்தானம் மீது ரூ.10 லட்சம் மோசடி, கொலை மிரட்டல் புகார்

|


Santhanam
தனது வீட்டை வாங்கிய நடிகர் சந்தானம் பாக்கித் தொகையான ரூ.10 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் தொழில் அதிபர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை உத்தண்டியைச் சேர்ந்தவர் ரவி கிஷன் (42). ஐஸ் கம்பெனி நடத்தி வருகிறார். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து நடிகர் சந்தானம் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

எனது பெயரில் விருகம்பாக்கம் தாங்கல் உள்வாய் தெருவில் பங்களா ஒன்று இருந்தது. நடிகர் சந்தானம் என்னையும், என் தந்தையையும் மிரட்டி ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள சொத்தை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு பேசி 10-3-2010 அன்று கட்டாய பதிவு செய்து கொண்டார். ஆனால் பேசிய பணத்தை தராமல் ரூ.1 கோடியே 75 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதியுள்ள ரூ.10 லட்சம் பணத்தை பிறகு தருவதாக நடிகர் சந்தானம் கூறினார்.

முதலில், ரூ.2.5 லட்சத்திற்கான செக்கை என்னிடம் கொடுத்தார். ஆனால் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்தது. மீதியுள்ள ரூ.7.5 லட்சம் பணத்தை கேட்டபோது பணத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து பணம் கேட்டு வந்ததற்கு இதற்கு மேல் ஒன்றும் தர முடியாது என்றும் மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் நடிகர் சந்தானம் கூறினார்.

மேலும், வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் தூக்கி சென்றுவிட்டார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

Post a Comment