'தலைவர் இல்லாமல் கூட்டம் நடத்துவதா?'- தயாரிப்பாளர்கள் சங்க போட்டி கூட்டத்தில் காரசாரம்

|


SA Chandrasekaran
சென்னை: 'சங்கத்தின் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் இல்லாமல் கூட்டத்தை நடத்துவதா?' என்று பட அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் காரசாரமாக வாக்குவாதம் நடந்தது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக, தொழிலாளர்கள் நல ஆணையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள், தொழிலாளர் நல ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

15 சங்கங்களுக்கான சம்பள உயர்வு உறுதி செய்யப்பட்ட நிலையில், தயாரிப்பாளர்களுக்கும், பெப்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை உருவானது. பெப்சி நிர்வாகிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

அட்ஹாக் கமிட்டி

இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் இருதரப்பினரையும் அழைத்து பேசினார். பெப்சி நிர்வாகிகளிடம், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறும்படி கூறினார். உடனே அவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றார்கள். பெப்சியுடன் தொடர்ந்து சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தையை நடத்தும்படி தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செல்லப்பாண்டியன் கேட்டுக்கொண்டார். அதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், அவருடைய ஆதரவாளர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் இதனை மற்ற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்து, 20 பேர் ராஜினாமா செய்தார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு போட்டியாக, 'அட்ஹாக் கமிட்டி' அமைத்து, அதன் தலைவராக இப்ராகிம் ராவுத்தரை நியமித்தார்கள்.

பொதுக்குழு கூட்டம்

இந்த அணியை சேர்ந்தவர்கள் சென்னை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அவசர சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார்கள். கூட்டத்துக்கு மூத்த தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் தலைமை தாங்கினார். இப்ராகிம் ராவுத்தர், கேயார், டி.சிவா, கே.முரளிதரன், ஏவி.எம்.முருகன், சி.வி.ராஜேந்திரன், `கலைப்புலி' ஜி.சேகரன், ஆர்.கே.செல்வமணி உள்பட ஏராளமான பட அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில், எஸ்.ஏ.சந்திரசேகரனை கண்டித்து பல தயாரிப்பாளர்கள் பேசினார்கள். நிர்வாகிகளின் ராஜினாமா கடிதங்களையும் காட்டினார்கள்.

எதிர்ப்பு

அப்போது, எஸ்.ஏ.சந்திரசேகரனின் ஆதரவாளர்களான தயாரிப்பாளர்கள் தமிழரசன், ரிஷிராஜ், ராஜசிம்மன் ஆகியோர் கூட்டத்தில் எழுந்து நின்று, "தலைவர் இல்லாமல் கூட்டத்தை நடத்துவதா?'' என்று எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள். பொதுக்குழு கூட்டப்பட்டதை கண்டித்து பேச முயன்றார்கள். அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து காரசாரமான வாக்குவாதம் நடந்தது. கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. தமிழரசன், ரிஷிராஜ், ராஜசிம்மன் ஆகிய மூன்று பேரும் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* தயாரிப்பாளர்கள்-தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சினையை சுமுகமாக பேசி முடிக்க உதவிய முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கும் பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

* தயாரிப்பாளர்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன் ஆகிய மூவரையும் அட்ஹாக் கமிட்டி 6 மாதங்கள் நீக்கிவைக்க முடிவெடுத்தது. அதற்கு பொதுக்குழு ஏகமனதாக ஆதரவு தெரிவித்தது.

* பெப்சி பேச்சுவார்த்தையை தொடர அட்ஹாக் கமிட்டிக்கு முழு உரிமை அளிப்பது.

* 4 மாத காலத்துக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்த முழு உரிமை வழங்குவது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

Post a Comment