நக்கீரன் கோபால் வழக்கு: வீரப்பன் சினிமா வனயுத்தம் மீதான இடைக்காலத் தடை நிறுத்திவைப்பு!

|


Nakkeeran Gopal and Veerappan
சென்னை: வனயுத்தம் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த சம்பவங்களை தொகுத்து "வனயுத்தம்'' என்ற சினிமா படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் உள்ளிட்ட உண்மை சம்பவங்கள் இடம் பெறுகின்றன. கன்னடத்திலும் இந்தப் படம் தயாராகிறது. அங்கு இதற்குப் பெயர் அட்டஹாஸா.

ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசு தூதர் என்ற முக்கிய பாத்திரமாக இருந்தார். எனவே அது பற்றிய காட்சிகள் எடுக்கப்படும்போது, தன்னிடம் அந்த பட தயாரிப்பாளர் ரமேஷ் உட்பட யாரும் ஆலோசனை பெறவில்லை என்றும் எனவே தன்னை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை அதில் பதிவு செய்யக்கூடும் என்ற சந்தேகம் எழுவதாகவும் சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் கோபால் மனு தாக்கல் செய்தார்.

இடைக்காலத் தடை

அந்த காட்சிகள் தொடர்பாக தன்னிடம் ஒப்புதல் பெற்ற பிறகே வனயுத்தம் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வழக்கில் கோபால் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த 17-வது உதவி சிட்டிசிவில் கோர்ட்டு, "வனயுத்தம்'' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க 10-ந் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனயுத்தம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், நக்கீரன் கோபால் பற்றிய கதாபாத்திரமோ அல்லது அவரது பெயரோ வனயுத்தம் படத்தில் இடம் பெறவில்லை. படம் வெளியிடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கும், மனுதாரர் கோபாலுக்கும் படம் திரையிட்டு காட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தடை நிறுத்தி வைப்பு

இதையடுத்து நீதிபதி சரவணன், "வனயுத்தம் படத்தில் நக்கீரன் கோபாலின் கதாபாத்திரமோ, அவரது பெயரோ இடம் பெறவில்லை என்று ரமேஷ் கூறியுள்ளதையும், அவருக்கு முன்னதாக படம் திரையிட்டு காட்டப்படும் என்ற உத்தரவாதத்தையும் பதிவு செய்துக் கொள்கிறேன். எனவே வனயுத்தம் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஜுன் 15-ந் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன். இந்த வழக்கு விசாரணை ஜுன் 15-ந் தேதி நடைபெறும்'' என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் நக்கீரன் கோபால் தரப்பில் வக்கீல்கள் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.
 

Post a Comment