பீனிக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் கண்ணன்ஜி தயாரிக்கும் படம், 'மதில் மேல் பூனை'. விஜய் வசந்த், விபா ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தை இயக்கும் பரணி ஜெயபால் கூறியதாவது: இது ஆக்ஷன், திரில்லர் படம். விஜய் வசந்த், விபா கதை ஒன்றாகவும் சிறுவர்களின் கதை மற்றொன்றாகவும் இரண்டு கதைகள் செல்லும். இடைவேளையில் இரண்டும் இணையுமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். பிற்பகுதி கதை அடர்ந்த காடுகளில் நடக்கிறது. இதற்காக தமிழக, கேரள காடுகளில் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கியுள்ளோம். அச்சன்கோவிலுக்கு மேலே நான்கு கி.மீ உள்ளே சென்றால் பெரிய பள்ளதாக்கு மாதிரியான இடம் இருக்கிறது. இங்கு செல்ல ஒற்றையடி பாதைதான் உண்டு. நடந்து சென்று ஹீரோ, ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தோம். திடீரென்று பத்து பனிரெண்டு யானைகள் கூட்டமாக எங்களை நோக்கி வந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கேமரா, உள்ளிட்ட ஷூட்டிங் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தூரமாக ஓடினோம். ஆனால், எங்களை நோக்கி வந்த யானைகள் அருகில் இருந்த ஆற்றில் தண்ணீர் குடிக்க இறங்கியதும்தான் எங்களுக்கு நிம்மதி வந்தது. பிறகு ஒரு மணிநேரம் கழித்து யானைகள் சென்ற பின் படமாக்கினோம். படம் முடிந்துவிட்டது. கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் பிரமாதமாக வந்துள்ளன. ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்.
Post a Comment