அரசியலுக்கு வருவது காலத்தின் கையில் உள்ளது - ஆரம்பித்தார் உதயநிதி

|


Udhayanidhi Stalin
நான் அரசியலுக்கு வருவதும் வராததும் காலத்தின் கையில் உள்ளது என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற ஒரே படத்தில் நடிகராக புகழின் உச்சிக்குப் போய்விட்டார் உதயநிதி.

இவரும் படத்தின் இயக்குனர் ராஜேஷும் கோவையில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகளில் இன்று ரசிகர்களை சந்தித்து பேசினர்.

படம் குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்ட அவர்கள், பின்னர் நிருபர்களைச் சந்தித்தனர்.

"சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. அது இப்போது நிறைவேறிவிட்டது. எனக்கு இது முதல் படம். இயக்குனருக்கு இது மூன்றாவது படம். இந்தப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்ப்பார்க்கவில்லை.

எங்கள் படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக பார்க்க தியேட்டருக்கு வந்து செல்கின்றனர். ஒரு படம் வரி விலக்கு பெற வேண்டுமானால் அதற்கு மூன்று விஷயங்கள் மட்டும் தேவை. அந்தப்படம் ஆபாசமில்லாத படமாக இருக்க வேண்டும். பிறமொழி கலந்த படமாக இருக்க கூடாது, தமிழ் பெயரில் தலைப்பு இருக்க வேண்டும்.

அனைவரும் பார்க்கும் படம் என்ற சான்றிதழ் வேண்டும். இந்த அம்சங்கள் இருந்தால் அந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கலாம் என்ற சட்டம் உள்ளது. எனது படத்தில் இந்த அம்சங்கள் எல்லாம் இருந்தும் வரிவிலக்கு அளிக்க மறுக்கிறார்கள். இதற்காக உச்சநீதிமன்றம் வரை கூட சென்று நான் படத்திற்கு வரிவிலக்கு பெறுவேன்.

படத்திற்கு ஒரு துளி ஆபாசம் இல்லை என்று கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக கோவை மக்களிடம் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.

படம் தமிழ்நாடு மட்டுமின்றி, வடமாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு காமெடி ரொம்பவும் பிடிக்கும். அதனால்தான் என்னுடைய முதல் படத்தை காமெடி படமாக தேர்வு செய்தேன்.

நான் முதலில் நடிப்பதாக இருந்த படம் யுத்தம் செய். ஆனால் அது சீரியஸ் கேரக்டர் படம் என்பதால் இந்தப்படத்தை தேர்வு செய்தேன். என்னுடைய படத்தை தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மனைவி எல்லோரும் பார்த்தார்கள்.

தாத்தா கதை வசனத்தில்...

என் தாத்தா (கருணாநிதி) நான் நன்றாக நடித்திருப்பதாக பாராட்டினார். அவரது கதை, வசனத்தில் நடிக்க அனைவரும் ஆசைப்படுவார்கள். நானும் தாத்தா கதை, வசனத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். என் மனைவி படத்தை பார்த்துவிட்டு சில சீன்களை குறிப்பிட்டு பாராட்டினார். அத எனக்கு சந்தோசமாக இருந்தது.

என் கதைகளை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். அவர்கள் கதையை கேட்டு எனக்கு பொருத்தமாக இருந்தால் தேர்வு செய்வார்கள். அதில் நான் நடிப்பேன். மற்றபடி யாருடைய குறுக்கீடும் அதில் இருக்காது. கேரளாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி இன்று ரிலீசாகியுள்ளது," என்றார்.

அரசியல் எப்போது...

அவரிடம் நீங்கள் உங்கள் தாத்தா, அப்பா வழியில் அரசியலில் குதிப்பீர்களா? என்று கேட்டபோது, "5 வருடங்களுக்கு முன் நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டீர்கள். இன்று நடித்துள்ளேன். அது போல் 5 வருடங்கள் கழித்து அரசியலில் குதிப்பேனா என்று தெரியாது. அதை காலம் தான் முடிவு செய்யும்," என்றார்.
 

Post a Comment