ஆமிர்கான் வி்த்தியாசமானவர். தனது ரசிகரான வாரணாசியைச் சேர்ந்த ஒரு ரிக்ஷா ஓட்டியின் மகன் திருமணத்திற்கு தன்னை அழைத்ததை தட்டாமல் ஏற்றுக் கொண்ட ஆமிர், அந்தத் திருமணத்திற்குப் போகவுள்ளாராம்.
வாரணாசியைச் சேர்ந்தவர் ராம் லக்கான். ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். 3 இடியட்ஸ் படத்தின் புரோமாவுக்காக வாரணாசிக்கு ஆமிர் போயிருந்தபோது அவருடன் நட்பாகி விட்டார். பின்னர் ஆமிரின் தீவிர ரசிகராகியும் விட்டார்.
ராம் லக்கான் தனது மகனுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். வாரணாசியில் நாளை திருமணம் நடைபெறுகிறது. இதையடுத்து மும்பை வந்த அவர் ஆமிரை சந்தித்து தனது மகன் கல்யாண பத்திரிக்கையைக் கொடுத்து அவசியம் கல்யாணத்திற்கு வர வேண்டும் என்று தயங்கித் தயங்கி கோரிக்கை வைத்தார்.
அவரது அழைப்பையும், அன்பையும் பார்த்து நெகிழ்ந்து போன ஆமிர் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறி ராம் லக்கானை வியப்பில் ஆழ்த்தினார். நாளை திருமணம் நடக்கிறது. இதில் ஆமிர் கலந்து கொள்ளவுள்ளாராம்.
3 இடியட்ஸ் படத்தின் புரோமோ நிகழ்ச்சிக்காக இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஆமிர் வாரணாசி போயிருந்தபோது ஒரு வயதானவர் போல வேடமிட்டுக் கொண்டு ராம் லக்கானின் ரிக்ஷாவில் ஏறி வாரணாசியை சுற்றிப் பார்த்தார். நேரம் போகப் போகத்தான் தனது சவாரியாக வந்திருப்பவர் ஆமிர் என்று லக்கானுக்குத் தெரிய வந்ததாம். இதனால் ஆச்சரியப்பட்டுப் போன அவர் தனது பேச்சாலும், அன்பாலும், நடத்தையாலும் ஆமிரை வெகுவாக கவர்ந்திழுத்து விட்டார்.
இந்த நட்புதான் தற்போது கல்யாணத்திற்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.