இந்த வெள்ளிக்கிழமை கோடம்பாக்கம் கொஞ்சம் டல்லுதான்!

|


வாராவாரம் வெள்ளிக்கிழமை வந்தாலே கோடம்பாக்கம் கொஞ்சம் உற்சாகமாகிவிடும். சின்னதும் பெரியதுமாக படங்கள் வந்துவிடும். படம் வெளியாகும் சந்தோஷம், அதைப் பார்க்கப் போகும் சந்தோஷம் (பார்த்தபிறகு இருக்கும் மனநிலை வேறு!) என கொஞ்சம் கலகலப்பாக இருக்கும்.

இந்த வாரம் அது கொஞ்சம் மிஸ்ஸிங். பெரிதாகப் படங்கள் ஏதுமில்லை. தொடர்ந்து மூன்றாவது வாரமாக உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. எந்தப் படம் போட்டாலும் இரண்டாவது வாரத்தில் டல்லடிக்கும் காசியில் கூட வார நாட்களிலேயே 90 சதவீத கூட்டம் வருகிறது இந்தப் படத்துக்கு.

இந்த வாரம் 3 சிறிய படங்கள் வெளியாகின்றன. அவை, ஆதி நாராயானா, நீண்ட நாள் தயாரிப்பிலிருந்த லீலை மற்றும் படம் பார்த்து கதை சொல் ஆகியவைதான்.

இவை தவிர, அவெஞ்சர்ஸ் 3 டி படம் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகிறது. இந்தப் படம் ஆங்கிலத்தில் 20 அரங்குகளிலும், தமிழில் 10 அரங்குகளிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் என்டிஆரின் தெலுங்கு படம் தம்மு 10 அரங்குகளில் வெளியாகிறது. ப்ரியதர்ஷனின் தேஜ் இந்திப் படம் கூட 10 அரங்குகளில் வெளியாகிறது.

தமிழில் நட்சத்திர மதிப்பு கொண்ட படங்கள் எதுவும் இல்லாததன் விளைவுதான் இது. அடுத்த வாரம் நிலைமை மாறுமா.. பார்க்கலாம்!
Posted by: Shankar
 

Post a Comment