செவந்தி மூவீஸ் சார்பில் ரவிகிஷோர் தயாரிக்கும் படம், 'ஏனென்றால் காதல் என்பேன்'. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோ ராம், தமன்னா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் ராம் பேசியதாவது: ஐதராபாத்தில் பிறந்தாலும், படித்தது, வளர்ந்தது சென்னையில்தான். 8 வருடங்களுக்கு முன்பு 'அடையாளம்' என்ற தமிழ் குறும்படத்தில் நடித்து வாய்ப்பு தேடினேன். 'காதல்', 'டிஷ்யூம்' பட வாய்ப்புகள் வந்து கடைசி நேரத்தில் கைநழுவிப்போனது. பிறகு தெலுங்கு படங்களில் நடித்தேன். ஆனால் தமிழில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறாமல் இருந்தது. இப்போது இந்தப் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்து தெலுங்கில் பல வெற்றிகளை கொடுத்த கருணாகரன் இயக்கத்தில் அறிமுகமாவது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காதல், காமெடி ஆக்ஷன் கலந்த கமர்சியல் படம். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சரவணன், சசி, ஸ்டேன்லி, பாடலாசிரியர் மதன்கார்க்கி, இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரோ, தமன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தயாரிப்பாளர் ரவிகிஷோர் நன்றி கூறினார்.
Post a Comment