இந்திக்கு போகும் தென்னிந்திய ஹீரோக்கள்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர்களை அடுத்து தென்னிந்திய ஹீரோக்களும் இந்தி படங்களில் அதிகமாக நடிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழில் ஹிட்டான 'கஜினி'யை ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் 2008-ல் ரீமேக் செய்து இயக்கினார். சூர்யா நடித்த கேரக்டரில் ஆமிர்கான் நடித்திருந்தார். இந்தப் படம் மெகா ஹிட் ஆனது. இதற்கு முன் பல்வேறு படங் களை தமிழ் இயக்குனர்கள் இந்தியில் ரீமேக் செய்திருந்தாலும் அந்த படங்கள் பெரிய கவனிப்பை பெறவில்லை. ஆனால், இந்தி 'கஜினி'க்குப் பிறகு தமிழ் இயக்குனர்களுக்கு இந்தியில் வரவேற்பு அதிகமானது. பிரபுதேவா, 'போக்கிரி' படத்தை 'வான்டட்' என சல்மான் நடிப்பில் இயக்கினார். ஹிட்டானது. இப்போது, 'ரவுடி ரத்தோர்' என்ற படத்தை இயக்கியுள்ளார். கவுதம் மேனன், 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை, 'ஏக் தீவானா தா' என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால், எதிர்பார்த்த அளவு ஹிட்டாகவில்லை. தமிழ் 'காவலனை' சித்திக் 'பாடிகாட்' என்ற பெயரில் இந்தியில் இயக்கினார். சல்மான்கான் நடித்த இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து, இந்தி ஹீரோக்களின் கவனம் தமிழ் இயக்குனர்கள் மீது திரும்பியுள்ளது.

சித்திக் மீண்டும் ஒரு இந்தி படத்தை இயக்க இருக்கிறார். லிங்குசாமி 'வேட்டை' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குகிறார். இதில் ஷாகித் கபூர் ஹீரோ. தற்போது சுசி கணேசன், 'திருட்டு பயலே' படத்தை இந்தியில், 'ஷார்ட்கட் ரோமியோ' என்ற பெயரில் தயாரித்து இயக்கி வருகிறார். நீல் நிதின் முகேஷ் நடித்து வருகிறார். தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்தியில் மவுசு அதிகரித்து வரும் நிலையில் ஹீரோக்களும் இந்தியில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். மாதவனும் சித்தார்த்தும் ஏற்கனவே இந்தி படங்களில் நடித்து வருகின்றனர். சூர்யா 'ரக்த சரித்திரா' படம் மூலம் இந்திக்குப் போனார். 'ராவண்' படத்துக்குப் பிறகு 'டேவிட்' என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார் விக்ரம். 'கொலவெறி' ஹிட்டுக்குப் பிறகு இந்தி சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ள தனுஷ், 'ரான்ஜ்னா' என்ற இந்திப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிருத்விராஜ் 'அயா', என்ற படத்திலும் ராணா 'டிபார்ட்மென்ட்' என்ற இந்தி படத்திலும் நடித்து வருகின்றனர். ராணா ஏற்கனவே 'தம் மாரோ தம்' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். ராம் சரண் தேஜா 'சாஞ்சீர்' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.  அவர் ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

''சினிமாவுக்கு மொழி கிடையாது. சாயாஜி ஷிண்டேவிலிருந்து சோனு சூட் வரை இந்தி வில்லன் நடிகர்கள் இங்கு நடித்துக் கொண்டிருக்கும்போது நம் ஹீரோக்கள் அங்கு நடிப்பதில் என்ன தவறு? இது ஆரோக்கியமான விஷயம்தான். பிசினஸ் என்பதை தாண்டி, மொழி கடந்து நடிகர்களை பார்ப்பது வரவேற்கத்தக்கது'' என்கிறார் யுடிவியின் (தென்னிந்திய) தலைமை செயல் அதிகாரி தனஞ்செயன்.
''இன்றைய காலகட்டத்தில் வட இந்திய, தென்னிந்திய நடிகர்கள் என்று அடையாளப்படுத்துவது அர்த்தமற்றது. இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து நடிக்க வந்தாலும், நடிகர்தான். அதனால் தென்னிந்திய நடிகர்கள் என்று சொல்வதே தேவையில்லாதது'' என்கிறார் ராம்சரண் தேஜா.


 

Post a Comment