மிருகவதை பிரச்னையில் இருந்து தப்பிக்க நிஜ நாய்களுக்கு பயிற்சி அளித்த இயக்குனர் பின்னர் பொம்மை நாய்களை வைத்து ஷூட்டிங் நடத்தினார். 'பொம்மை நாய்கள்Õ என்ற படத்தை எழுதி, இசை அமைத்து இயக்குகிறார் பாபா விக்ரம். அவர் கூறியதாவது: 3 நாய்களை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இவைகள் கடித்தால் அவருக்கு மரணம் நிச்சயம். இவைகளை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி யார்? எதற்காக அவ்வாறு செய்கிறார் என்பதுதான் கதை. இதற்காக 3 நாய்களுக்கு மாதக்கணக்கில் பயிற்சி கொடுத்தோம். ஏற்கனவே சில படங்களில் யானை, குதிரைகள் காட்டப்பட்டதற்காக மிருகவதை சட்டத்தின் கீழ் பிரச்னை எழுந்தது. அதே பிரச்னை இப்படத்துக்கும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பயிற்சி நாய்களை திருப்பி அனுப்பிவிட்டேன். கொழு கொழுவென 3 பொம்மை நாய்களை வாங்கி அவற்றையே இதில் பயன்படுத்தினேன். இவைகள் உயிர்பெற்று எதிரிகளை கொல்லும் அனிமேஷன் காட்சிகளுக்காக படத்தின் பட்ஜெட்டில் பாதி தொகை செலவிடப்பட்டுள்ளது. இவை திகில் நிறைந்த காட்சியாக இருக்கும். இதில் ஹீரோக்கள் பொம்மை நாய்கள்தான். முக்கிய வேடத்தில் ராதாரவி, நாசர், கருணாஸ், பாண்டு, வி.எஸ்.ராகவன், கோவை சரளா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு எஸ்.வி.உதயகுமார். இவ்வாறு பாபா விக்ரம் கூறினார்.
Post a Comment