தெருநாய்களுக்கு கு.க: வெள்ளை அறிக்கை கோரும் அமலா

|

Actress Amala Demands White Paper Aid0136
பெங்களூர்: பெங்களூரில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நடிகை அமலா வலியுறுத்தியுள்ளார்.

விலங்குகள் நலச்சங்கம் நிறுவனரும், நடிகையுமான அமலா நேற்று பெங்களூரில் நிருபர்களிடம் இதுகுறித்துப் பேசுகையில், "பிராணிகளில் நாய்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறது. அவை நமது வீட்டின் செல்ல பிராணியாகவும், பாதுகாவலனாகவும் விளங்குகின்றன.

தெருநாய்கள் உருவாவதற்கு நாமே காரணம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தெருநாய்களே இல்லை. அங்குள்ள மக்களின் சிறந்த அணுகுமுறையால் தெருநாய்கள் இல்லை.

ஹைதராபாத்தில் பல குடிசைப்பகுதிகள் உள்ளன. அங்கும் தெரு நாய்கள் உள்ளன. அந்த நாய்கள் குடிசைப்பகுதி மக்களுக்கு பாதுகாவலனாக விளங்குகிறது. இதனால் குடிசைப்பகுதி மக்கள் தெருநாய்களை விரும்புகிறார்கள்.

தெரு நாய்கள் மீது அன்பு காட்ட வேண்டும். அவற்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும். குப்பையில் கிடக்கும் உணவுகளை தின்பதால்தான் நாய்களுக்கு வெறி பிடிக்கிறது. நாய்கள் வெறிபிடித்து கடிப்பதற்கு நாமே காரணம். இதனால் அவைகளை நமது குடும்பத்தில் ஒன்றாக வளர்க்க முயற்சிக்க வேண்டும்.

பெங்களூர் மாநகராட்சியில் சமீபத்தில் நாய் கடித்து 2 வயது குழந்தை இறந்ததை அறிந்தேன். இது வேதனை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது நமது கடமை. தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை செய்யும் வழிமுறை உள்ளது. ஆனால் அதை செய்யாமல் நாய்களை மறைமுகமாக கொல்லும் கொடூரம் நடக்கிறது.

தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்க மாநகராட்சி கருத்தடை செய்வது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அதன் மூலம் பெரிய அளவில் பலன் கிடைத்ததாக தெரியவில்லை. இது திட்டத்தின் தோல்வியை காட்டுகிறது. இதில் உண்மை நிலவரம் வெளிவர வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்," என்றார்.
Close
 
 

Post a Comment