புதிய தலைமுறையின் கொஞ்சம் சோறு…. கொஞ்சம் வரலாறு….

|

Koncham Soru Koncham Varalaru
எந்த ஒரு நிகழ்ச்சியுமே அதை சொல்லும் விதத்தில் பாதி வெற்றி பெறுகிறது. மக்களிடம் அது சென்று சேரும் விதத்தில் மீதி வெற்றியடைகிறது.

சமையல் நிகழ்ச்சிகள் பல விதம். தொலைக்காட்சியில் சமையல் கலை வல்லுநர் ஒரு உணவை செய்து காட்டி அதற்கான செயல்விளக்கத்தை அளிப்பார். ஆனால் உணவு பற்றிய புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கொஞ்சம் சோறு… கொஞ்சம் வரலாறு சற்றே வித்தியாசமான நிகழ்ச்சி.

அல்வாவோ, ஐஸ்கிரீமோ எதுவென்றாலும் அது உயிரோட்டமுள்ளதாக அதன் வரலாறோடு தொடர்புடையதாக இருக்கும். எந்த ஊரில் என்ன விசேஷமோ அங்கு நேரடியாக சென்று அந்த உணவின் சிறப்பு அதன் வரலாறு குறித்து பதிவு செய்து ஒளிபரப்புகின்றனர். அந்த உணவு எவ்விதம் இந்தியாவிற்கு வந்தது? பண்டைய காலத்தில் இருந்து மக்கள் அதனை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பது வரை விளக்கமளிக்கின்றனர்.

இன்றைக்கு ஊடகம் இருக்கிறது. அதனால் விளம்பரம் மூலம் எதையும் எளிதாக விற்றுவிடுகிறார். 20 வருடங்களுக்கு முன்பு வரை நூடுல்ஸ், பாஸ்தா, பீட்ஸா, பர்கர், ஓட்ஸ் என எதுவுமே தமிழ்நாட்டிற்குள் எட்டிப்பார்த்ததில்லை. இன்றைக்கு அனைத்து உணவுப்பொருளும் பட்டி தொட்டி எங்கும் கிடைக்க காரணம் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரம்தான். அந்த அளவிற்கு ஊடகங்களின் வருகையினால் ஒரு உணவு மக்களிடம் எளிதில் சென்று சேர்கிறது.

உணவுகளின் பழமை, வரலாற்றினை உணர்த்தும் இந்த நிகழ்ச்சியில் நான் பார்த்து ரசித்தது பல உண்டு. அதில் இறால் மீன் ஊறுகாய் செய்து காட்டிய விதம் நாவில் நீர் ஊறச் செய்தது. வாரம்தோறும் சனி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு. இரவில் பார்க்கத் தவறியவர்களுக்காக இந்த நிகழ்ச்சி மறுநாள் காலை 8.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.
 

Post a Comment