மேலும் தாமதமாகும் பெரிய பட்ஜெட் படங்கள்!

|

Tamil Cinema Biggies Release Delay Further
தமிழ் சினிமாவில் கோடை காலம் மிக முக்கிய சீஸன். நாட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ... திரையரங்கில் வசூல் மழை இருக்கும்.

எனவே இந்த கோடையைக் குறிவைத்து முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் தயாராவது வழக்கம்.

இந்த ஆண்டு கோடை ரிலீஸில் முக்கியப் படமாக எதிர்ப்பார்க்கப்பட்டது கமல் ஹாஸனின் விஸ்வரூபம். ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

பாடல்கள் சேர்க்கப்படாத, படத்தின் ஒரு பிரதியை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பிவிட்டார் கமல்ஹாஸன் என்று தெரிகிறது. ஆனால் தியேட்டர் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகிறது.

படத்தின் விளம்பரம், வர்த்தகம் தொடர்பான வேலைகளை இனிமேல்தான் கமல் துவங்கவிருப்பதால், படம் வெளியாவது தாமதமாகிறது.

இந்த கோடையில் இன்னொரு முக்கிய வெளியீடு அஜீத்தின் பில்லா 2. பெப்சி தொழிலாளர் பிரச்சினை காரணமாக, மே மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம், ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிப் போயுள்ளது.

சூர்யாவின் மாற்றான் திரைப்படம் மே மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் இதையும் தாமதப்படுத்தியுள்ளது பெப்சி தொழிலாளர் பிரச்சினை. ரஷ்யா, சீனா என வித்தியாசமான லொகேஷன்களில் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் நல்ல எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

கார்த்தி நடிக்கும் சகுனி ஏப்ரலில் வரவிருந்தது. இந்த மாதம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.

பெரிய படங்கள் வராதது, வழக்கு எண் 18/9 போன்ற சிறிய, ஆனால் நல்ல படங்கள் பக்கம் ரசிகர்களை அதிகம் போக வைத்துள்ளது. அந்த வகையில் இந்த தாமதத்திலும் ஒரு நல்லது நடந்துள்ளது!
 

Post a Comment