இனிமையும், மென்மையும், கலந்த கலவை நான்- நடிகர் ராஜ்காந்த் சிறப்பு பேட்டி!

|

Actor Rajkhanth Interview
உறவுகள் தொடரில் இரு மனைவிகளின் கோபக்கார கணவனாகவும், செல்லமே தொடரில் அன்பான, பாசமான கணவன் வாசுவாகவும், வைராக்யம் தொடரில் காமெடி ஹீரோவாகவும் கலக்குபவர் நடிகர் ராஜ்காந்த். இவரது வளர்ச்சி ஒரே நாளில் வந்ததல்ல 19 வருட போராட்டம் என்கிறார்.

சின்னத்திரை நடிகரானது எதிர்பாராத நிகழ்வு என்று கூறும் அவர் இன்றைக்கு சின்னத்திரை சங்கத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்துள்ள ராஜ்காந்த். தன்னுடைய நடிப்பு பற்றியும், தனக்கு பிடித்தவை பற்றியும் தட்ஸ் தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

கேள்வி: ஒரே நாளில் கோபக்கார கணவராகவும், அன்பான கணவராகவும் நெடுந்தொடர்களில் எப்படி நடிக்க முடிகிறது?

ராஜ்காந்த்: இந்த வித்தியாசம்தான் என்னை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறது. வில்லனாக நிறைய தொடர் நடித்து விட்டேன்.

ஹீரோ போல சில கேரக்டர்கள் நடித்துள்ளேன். உறவுகள் தொடரை விட செல்லமே வாசுதான் அனைவரின் மனதிலும் நிற்கிறது. அதற்கு அந்த கதாபாத்திரம்தான் காரணம்.

கேள்வி: வைராக்யம் தொடரில் திடீர்னு காமெடி பண்றீங்களே எப்படி?

ராஜ்காந்த்: என்னுடைய நீண்ட நாள் ஆசை இது. எத்தனையோ பேட்டிகளில் கூட சொல்லியிருக்கிறேன். எனக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக எனக்கு வைராக்யம் தொடர் அமைந்திருக்கிறது. இருப்பதிலேயே காமெடிதான் கஷ்டமானது ஆனால் அதுதான் எனக்கு இஷ்டமானது.

கேள்வி: சீரியல் நடிக்கும் ஆர்வம் எப்படி வந்தது ?

ராஜ்காந்த்: இது எதிர்பாராத நிகழ்வு. நான் நடிக்க ஆரம்பித்து 22 வருடங்கள் ஓடிவிட்டன. எனக்கு முதன் முதலாக நடிகராக ஓபனிங் கிடைத்த தொடர் சக்தி. 98ல் சன் டிவியில் ஒளிபரப்பானது. அப்புறம் ஏவிஎம்மின் நம்பிக்கை தொடரில் அப்பா, தாத்தா கேரக்டர் செய்தேன் அது அனைவரும் பாராட்டும் படியாக அமைந்தது.

கேள்வி: மெட்டி ஒலி தொடர்தானே உங்களை தமிழக ரசிகர்களிடம் அறிமுகம் செய்தது?

ராஜ்காந்த்: என்னுடைய நடிப்பு பரிமாணத்தை வெளிக் கொண்டு வந்த தொடர் அது. என்னுடைய நடிப்புத்திறமையை வெளிக்கொண்டுவந்த இயக்குநர் திருமுருகன் சாருக்கு இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் மேகலா தொடரிலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் தொடர்களில் உறவுகள், செல்லமே, வைராக்கியம் ஆகிய மூன்றுமே வெவ்வேறு விதமான நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. அதுதான் ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது.

கேள்வி: நடிப்பு தவிர வேறு பொழுது போக்குகள் ?

ராஜ்காந்த்: நடனமாட எனக்கு பிடிக்கும். கலா மாஸ்டரிடம் நடனம் கற்றிருக்கிறேன். மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி பரிசு வென்றிருக்கிறேன். வீட்டில் இருக்கும் போது மியூசிக் சேனல்தான் விரும்பி பார்ப்பேன்.

கேள்வி: உங்களுடைய வாழ்நாள் சாதனை என்று ஏதாவது உண்டா?

ராஜ்காந்த்: குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் கிடையாது. நடிகரான எனக்கு எந்த கேரக்டர் என்றாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டு. சாதாரண நடிகராக அறிமுகமான நான் இன்றைக்கு சின்னத்திரை சங்கத்தின் பொதுச்செயலாளர் அளவிற்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் என்மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான். என்னைவிட சீனியர் நடிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதற்கு ரசிகர்களின் ஆதரவும், சங்கத்து உறுப்பினர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும்தான்.

உங்கள் மீது நாங்களும் நம்பிக்கை வைத்திருக்கிறோம் ராஜ்காந்த். உங்கள் நடிப்பு பயணத்தில் மேலும் உயர தட்ஸ் தமிழ் வாழ்த்துகிறது.
 

Post a Comment