ஓகே ஓகே, கலகலப்பு.... பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!

|

Comedy Movies Rock Tamil Box Office    | ஓகே ஓகே  
தமிழில் ஒரு படம் வென்றால், அந்தப் படப் பாணியை கொஞ்ச நாளைக்கு பின்பற்றுவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு எங்கு திரும்பினாலும் காமெடி படங்களாகவே இருக்கும் போலிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தியேட்டருக்கு வந்து அதிகம்பேர் பார்த்த படம் என்ற வகையில், சூர்யாவின் ஏழாம் அறிவுக்கு அருகில் வந்துவிட்டது (முதலிடம் எந்திரன்தான்!).

6 வாரங்களாகியும் திருப்தியான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது ஓகேஓகே.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பு - மசாலா கபேயும் சூப்பர் ஹிட் படமாகியுள்ளது பாக்ஸ் ஆபீஸில். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் இந்தப் படம் கிட்டத்தட்ட அனைத்து ஏரியாக்களிலுமே ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்னொன்று மற்ற படங்களைவிட, காமெடி படங்களைத்தான் மக்கள் தியேட்டரில் வந்து அதிகம் பார்க்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

விளைவு, சுந்தர் சி, ராஜேஷ் எம், சற்குணம் ஆகிய இயக்குநர்களை நாடும் தயாரிப்பாளர்கள், 'நல்ல காமெடியா எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க பாஸ்' என கேட்க ஆரம்பித்துள்ளார்களாம்.

சினிமா எடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தோடு உள்ள ஏவிஎம் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள், சின்ன பட்ஜெட்டில் காமெடி படம் முயற்சிக்கலாமா என்ற யோசனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ட்ரெண்டில், சந்தானம் காட்டில்தான் பேய் மழை. இதற்கு முன் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு பெரிய சம்பளத்துக்கு அவர் தாவிவிட, இன்னொரு சந்தானத்தை உருவாக்கிட்டா போச்சு என, அடுத்த கட்ட காமெடியன்களைப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர் முன்னணி இயக்குநர்கள்.

இவர்களின் சாய்ஸ் இப்போது பரோட்டா சூரிதான். டைமிங் காமெடி மற்றும் வடிவேலு மாதிரி உடல்மொழி உள்ள நடிகர் என்பதால் இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள்.

இன்னொரு பக்கம் புதிய காமெடி நடிகர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர் பிரபல இயக்குநர்கள்.

எப்படியோ மக்களைச் சிரிக்க வைத்தால் சரி!
 

Post a Comment