மூன்றாவது வழக்கிலும் சக்ஸேனா கைது... மீண்டும் போலீஸ் காவலில் விசாரணை!

|

12 Police Arrests Saxena Third Time Aid0136
சென்னை: மாப்பிள்ளை பட விவகாரத்தில் தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜெபக் கொடுத்த புகாரிலும் சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கிலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்கிறது போலீஸ்.

சன் பிக்சர்ஸ் நிர்வாக இயக்குனர் சக்சேனா மீது சேலம் சினிமா விநியோகஸ்தரான செல்வராஜ் புகார் கொடுத்தார். தீராத விளையாட்டு பிள்ளை படம் தொடர்பாக ரூ.82 லட்சத்தை அவர் மோசடி செய்து விட்டதாக அதில் தெரிவித்திருந்தார்.

இதன்பேரில் சக்சேனா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

அப்போது சேலத்தைச் சேர்ந்த சண்முகவேலு என்பவர் கே.கே.நகர் போலீசில் மேலும் ஒரு புகார் கொடுத்தார். அதில், சன் பிக்சர்ஸ் சக்சேனா அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் தன்னை அறையில் பூட்டி வைத்து தாக்கியதாக கூறியிருந்தார்.

இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து சக்சேனாவையும், அய்யப்பனையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நேமிசந்த் கோடம்பாக்கம் போலீசில் சக்சேனா மீது மேலும் ஒரு புகார் அளித்தார்.

தனுஷ் நடித்து வெளியான மாப்பிள்ளை படத்தை ரூ.17 கோடிக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்தேன். இதில் ரூ.15 கோடி கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 2 கோடி ரூபாய்க்கு கோவை விநியோக உரிமையை தருவதாக சக்சேனா கூறியிருந்தார். ஆனால் விநியோக உரிமை தரப்படவில்லை. பணத்தை நான் திருப்பி கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்தனர் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது இந்த வழக்கிலும் 3-வது முறையாக சக்சேனா கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை இதற்கான மனுவை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்கிறார்கள்.

நீதிமன்ற அனுமதி பெற்று புழல் சிறையில் இருக்கும் சக்சேனாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
Close
 
 

Post a Comment