நடிகர் ஷாருக்கான் எங்களை ஏமாற்றிவிட்டார்-கொல்கத்தா ரசிகர்கள் கொதிப்பு

|

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி ஊர்வலத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை காண பல மணிநேரமாக வெயிலில் காத்திருந்தோம். ஆனால் அவர் ஊர்வலத்தில் வராமல் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புலம்பினர்.

ஐபிஎல் 5 தொடரின் சாம்பியன்ஸான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி கொண்டாட்டம் மூலம் இன்று கொல்கத்தா நகரமே அதிர்ந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களை காண கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளமும், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை காண சினிமா ரசிகர்களும், அரசியல் சார்ந்த தொண்டர்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொல்கத்தாவில் சாலைகளில் 5 கி.மீ. தூரம் வெற்றி ஊர்வலம் வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், அணி உரிமையாளர் ஷாருக்கானும் வருவார் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் வெற்றி ஊர்வலத்தில் ஷாருக்கான் வரவில்லை.

இந்த நிலையில் வெற்றி ஊர்வலம் நடைபெற்ற பாதையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களை பாராட்டும் வகையில், உள்ளூர் கவுன்சிலர்கள் சார்பாக ஜடுபாபு பஸர் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெற்றி ஊர்வலத்தில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ளாததால், ரசிகர்களின் உற்சாகம் குறைந்தது. மேலும் ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக மேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

இதனால் பாதுகாப்பு கருதி வெற்றி ஊர்வலம் வந்த பஸ்சில் வந்த வீரர்கள் யாரும் மேடை இருந்த பகுதியில் கீழே இறங்கவில்லை. இதனையடுத்து அங்கு காத்திருந்த ரசிகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் கைகளில் இருந்து பூச்செண்டுகளை வீரர்களை நோக்கி ஏறிந்தனர்.

அப்போது நடிகர் ஷாருக்கானை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கூறியதாவது,

நடிகர் ஷாருக்கான் மிகவும் கோர குணம் கொண்டவர். நாங்கள் அவரை காண வேண்டும் என்ற ஆசையில், பல மணிநேரமாக கடும் வெயிலில் காத்திருந்தோம். ஆனால் அவர் ஊர்வலத்தில் வராததால் ஏமாற்றம் அடைந்தோம். ஷாருக்கானை காண வந்த நாங்கள் முட்டாள் ஆனோம் என்றனர்.

ஆனால் ஈடன் கார்டனில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து ஆடி பாடினார்.

அதன்பிறகு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், உங்களால் (ஷாருக்கான்) நாங்கள் பெருமை அடைகிறோம். முழு மேற்கு வங்க மாநிலமும் பெருமை அடைந்தது. இந்த நாடே உங்களால் பெருமை அடைந்துள்ளது என்றார்.

மேடையில் பேசிய நடிகர் ஷாருக்கான், இந்த வெற்றி முழு மேற்கு வங்க மாநிலத்தின் வெற்றி. கொல்கத்தா அணிக்கு ஆதரவு அளித்த அனைத்து மக்களுக்கும், தீதிக்கும் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பிர், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
Close
 
 

Post a Comment