எதியூரப்பா மகனுடன் தொடர்பில்லை.. மறுக்கிறார் நடிகை ஹரிப்ரியா

|

Haripriya Denies Reports On Her Link Yediyurappa Son   
கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் எதியூரப்பா மகனுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஹரிப்ரியா.

தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபலமானவர் நடிகை ஹரிப்ரியா. இவர் தமிழில் அர்ஜுனுடன் 'வல்லக்கோட்டை' படத்தில் நடித்தார். கரணுடன் 'கனகவேல் காக்க' படத்திலும், சேரனுடன் 'முரண்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

ஹரிப்ரியா வீடு பெங்களூரில் உள்ளது. அந்த வீட்டில் சி.பி.ஐ. போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.

சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு குழுவினர் ஹரிப்ரியா வீட்டில் புகுந்து சோதனை போட்டதாகக் கூறப்பட்டது.

எதியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வீட்டிலும் சோதனை நடந்தது. விஜயேந்திராவுக்கும், ஹரிப்ரியாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் எனவே தான் ஹரிப்ரியா வீட்டில் இந்த சோதனை நடந்ததாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இந்த செய்தியை ஹரிப்ரியா அடியோடு மறுத்தார்.

அவர் கூறுகையில், "என் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்தததாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சியானேன். அப்படி எந்த சோதனையும் நடக்கவில்லை. எதியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுடன் எனக்கு தொடர்பில்லை. அது வதந்தியே.

அவரைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. நேரில் சந்தித்ததும் இல்லை," என்றார்.
Close
 
 

Post a Comment