முழுக்க முழுக்க தமிழில் பேசி அசத்திய 'பாலய்யா'!

|

Balakrishna Unveils Varuvaan Thalaivan Poster
வருவான் தலைவன் (தெலுங்கில் 'உ கொடுத்தாரா உலிக்கி படத்தாரா') என்ற படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடந்தது. நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி பிரசன்னா, மஞ்சு மனோஜ் நடித்து தயாரித்து, புதியவர் சேகர் ராஜா இயக்கும் பிரமாண்டமான படம் இது.

இயக்குநர் பி வாசு, தயாரிப்பாளர் டி ராமாராவ், நடிகை பிரபா, நடிகர் சிம்பு என பலரும் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில்.

இந்த நிகழ்ச்சிக்காகவே ஹைதராபாதிலிருந்து வந்திருந்தார் 'நட சிம்மம்' என ரசிகர்களால் அழைக்கப்படும் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா. சென்னையில் சினிமா நிகழ்ச்சியொன்றில் அவரைப் பார்ப்பது இதுதான் முதல் முறை (நமக்கு!).

படத்தின் பிரதான ஹீரோவான அவரை, போஸ்டரை அறிமுகப்படுத்தி பேச அழைத்தனர்.

என் அன்பு பத்திரிகை சோதரர்களே, என்று தமிழில் ஆரம்பித்தவர், கடைசியில் நன்றி வணக்கம் சொல்லி முடிக்கும் வரை தமிழிலேயே பேசி அசத்தினார்.

சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்தவரென்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டவர் பாலகிருஷ்ணா. நான்கு வார்த்தைகள் சம்பிரதாயத்துக்கு தமிழில் பேசி, அப்படியே தெலுங்குக்குத் தாவினாலும் அவரை யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால் மொழி தொடர்பான சென்டிமென்டை நன்குப் புரிந்தவரான அவர், தன் பேச்சு முழுவதும் தமிழில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

தனது பேச்சில், தனக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்ந்து, தன் தந்தை சென்னையை நேசித்ததையெல்லாம் சொன்னார். "எங்கப்பா குடிச்சது, குளிச்சதெல்லாம் தமிழ்நாட்டுத் தண்ணிதான். இந்த சென்னைதான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தது. அப்படிப்பட்ட பூமிக்கு நாம என்ன நன்றி செய்வது... என்ன செய்தால்தான் ஈடாகும்.... அதனால்தான் எங்கப்பா தெலுங்கு கங்கை பெயரில் தண்ணீர் கொடுக்க உத்தரவிட்டார்," என்றார்.

பேசி முடித்து இருக்கையில் அமர்ந்தவரை, ஒரு நிருபர், தெலுங்கில் ரெண்டு வரி பேசுங்க என்றதும், மீண்டும் மேடைக்கு வந்து ஒரு நிமிடம் தெலுங்கில் பேசி கலகலப்பூட்டினார் பாலகிருஷ்ணா.

பின்னர் தன்னைச் சூழ்ந்துகொண்ட நிருபர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக நீண்ட நேரம் பேட்டியளித்தார். உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியவர்களை, நோ பிராப்ளம்... வாங்க பிரதர் என்று தோள்மீது கைபோட்டு போஸ் கொடுத்துவிட்டு, அனைவருக்கும் தவறாமல் வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பினார் 'பாலய்யா'!
Close
 
 

Post a Comment