'மறுபடியும் ஒரு காதல்' படம் மூலம் வடிவேலு மீண்டும் வருகிறார். பிலிம் மீடியா சார்பில் வாசு பாஸ்கர் தயாரித்து இயக்கும் படம், 'மறுபடியும் ஒரு காதல்'. அனிருத், ஜோஸ்னா, வாணி கிஷோர், சுமன், மயில்சாமி உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு கண்ணன், இசை, ஸ்ரீகாந்த் தேவா. இந்த மாத இறுதியில் படம் வெளிவருகிறது. படம் பற்றி வாசு பாஸ்கர் கூறியதாவது: எல்லா கமர்சியல் அம்சங்களும் நிறைந்த காதல் படம். கட்டாய திருமணம் செய்து வைக்கப்படும் இருவரில் கணவன் தன் காதலியுடனும், மனைவி தன் காதலுடனும் சேர விரும்புகிறார்கள். இதனால் குடும்ப வாழ்க்கை கசக்கிறது. இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்து அவரவர் காதலர்களுடன் இணைவது என்று முடிவு செய்கிறார்கள். அது நடந்ததா என்பதுதான் கதை. காதலின் மகத்துவத்தையும், குடும்ப உறவின் சிக்கல்களையும் சொல்லும் படம். வடிவேலு இதில் போலி டாக்டராக நடித்துள்ளார். அவர் செய்யும் சிகிச்சைகள் ஏற்படுத்தும் விளைவுகள். இதனால் அவர் படும் அவஸ்தைகள் என்று படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். வடிவேலுவின் காமெடியை நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் ரசித்து சிரிக்கலாம். ஸ்ரீகாந்த் தேவா 6 பாடல்களை கொடுத்துள்ளார். அவருக்கும் இந்தப் படம் திருப்புமுனையாக அமையும். தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது.
Post a Comment