மாயவரம் இயக்குநர் ராஜேந்திரனை கைது செய்ய நடவடிக்கை!

|

சென்னை: போலீஸ் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்திய சினிமா இயக்குநர் ராஜேந்திரனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை நந்தம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குள் பர்மா காலனி உள்ளது. இங்குள்ள முனீஸ்வரர் கோவில் அருகே கடந்த 12-ந் தேதி அன்று 'மாயவரம்' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

நள்ளிரவில் நடந்த இந்த படப்பிடிப்புக்கு அரசு அனுமதியோ, போலீஸ் அனுமதியோ வாங்கப்படவில்லை. முறையாக போலீசாருக்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை.

தன்னிச்சையாக படப்பிடிப்பு நடத்தி வந்த படப்பிடிப்பு குழுவினர் நள்ளிரவில் பெரிய ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதை தட்டிக்கேட்ட அந்த பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரையும் மிரட்டியுள்ளனர். இதனால் சுப்புலட்சுமி நந்தம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நந்தம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. போலீசாரை பார்த்ததும் அந்த படத்தின் தயாரிப்பு மேலாளர் மூர்த்தி, படத்தின் இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

அவர்கள் மீது போலீஸ் அனுமதியில்லாமல் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் படப்பிடிப்பு நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Close
 
 

Post a Comment