புதுக்கோட்டை அதிமுக வேட்பாளருக்கு போட்டியிலிருந்து விலகிய ரஜினி மன்ற செயலாளர் ஆதரவு!

|

Pudukottai Rajini Fans Club Secretary Extends Supports
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட மனு செய்து பி்ன்னர் ரஜினிகாந்த்தின் வேண்டுகோளின் படி போட்டியிலிருந்து விலகிய மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ஸ்ரீதர், தனது சக ரசிகர்களோடு அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் கே.ஸ்ரீதர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதை அறிந்ததும் அவரை உடனே போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு ரஜினிகாந்த் கட்டளையிட்டிருந்தார்.

ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் மூலமாக இந்த உத்தரவு போனது. இதையடுத்து ஸ்ரீதர் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் போட்டியில் இருந்து விலக முடிவு செய்தேன் என்றார்.

இந்த நிலையில், தற்போது அதிமுக வேட்பாளருக்கு ஸ்ரீதர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதலமைச்சர் ஜெயலலிதா பாடுபட்டு வருவதால் அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். பாபா படம் திரையிடப்பட்டபோது பாமகவினர் மிரட்டல் விடுத்தனர். அப்போது தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பை கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றார்.

பின்னர் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை நேரில் சந்தித்தும் தனது ஆதரவை அவர் தெரிவித்தார். அவருடன் ஏராளமான ரசிகர்களும் உடன் சென்றனர். அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அமைச்சர்களும், நிர்வாகிகளுமான ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோரையும் சந்தித்து தங்கள் மன்றத்தின் ஆதரவையும் ஸ்ரீதர் தெரிவித்தார்.
Close
 
 

Post a Comment