சின்னத்திரையிலும் இணைந்து கலக்குவார்களா மஞ்சுளாவும், விஜயக்குமாரும்?

|

Will Manjula Join With Vijayakumar In Tv Serials
சினிமாவில் நடித்து வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்தவர்கள் விஜயகுமார், மஞ்சுளா தம்பதியர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் ஜோடியாக நடித்த பல படங்களை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட்டாக வரும். இப்போது இருவருமே சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டனர். மஞ்சுளா கூண்டுக்குள் கிளியாக வீட்டோடு இருந்து வந்தார்.

தற்போது சின்னத்திரையில் இருவரும் தனித்தனியாக களம் இறங்கியுள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் தங்கம் நெடுந்தொடரில் விஜயகுமார் நடித்து வருகிறார். அதேபோல் மெகா டிவியில் சந்திரலேகா என்ற புதிய தொடரில் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் மஞ்சுளா. முதன் முறையாக அவர் சின்னத்திரைக்கு அறிமுகமாகும் தொடர் இது.

இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நிஜத்தில் தம்பதியான இவர்கள் தனித்தனியாக தொடர்களில் கலக்கும் நிலையில் சினிமாவைப் போலவே, நிஜ வாழ்க்கையைப் போலவே டிவியிலும் இணைந்து கலக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு டிவி சீரியல்களை விரும்பிப் பார்க்கும் இல்லத்தரசிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Post a Comment