கடந்த 2009-10 ஆண்டில் நடத்தப்பட்ட 10 நிமிட கதைகள் என்ற குறும்பட போட்டி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் 10 நிமிட கதைகள் குறும்பட போட்டி மக்கள் டிவியில் துவங்கியுள்ளது.
இந்த முறையும் இந்நிகழ்ச்சிக்காக ஏராளமான இளம்படைப்பாளிகளிடமிருந்து குறும்படங்கள் வந்து குவிந்துள்ளதாம். மீனவர் பிரச்சினை, நிலத்தடிநீர் பாதிப்பு, குழந்தை தொழிலாளர்கள், பெண் வன்கொடுமைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை குறும் படமாக உருவாக்கி, போட்டியில் இளம் படைப்பாளிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ‘பேப்பர்' குறும்படம் சட்டென ஒரு கருத்தை உணரவைத்தது. பேப்பர் பொறுக்கும் பெண், அலுவலக பணியாளர்கள் என அவர்களை சுற்றிய கதைக்களம். எளிமையான திரைக்கதையில் சொல்லவேண்டியதை தெளிவாக உணர்த்தியிருந்தார் இயக்குநர்.
இந்த போட்டியில் முதல் கட்டத்துக்கு தேர்வானவர்கள், நடுவர்கள் தரும் புதிய தலைப்பின் அடிப்படையில் இன்னொரு குறும்படத்தை போட்டிக்காக உருவாக்க வேண்டும். இந்த புதிய குறும் படத்தகுதி அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியை சித்ரா தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் குறும்படம் பற்றி தங்களின் கருத்துக்களை நேயர்களுடன் பிரபல இயக்குநர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஏற்கனவே 2009-2010-ம் ஆண்டு நடத்திய குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு இயக்குனர் பாலுமகேந்திரா பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
Post a Comment