ராவுத்தர் அணி செய்யும் இடையூறால் சம்பளம் கொடுக்கக் கூட முடியல..! - கமிஷனரிடம் எஸ் ஏ சி புகார்

|

Sac Files Complaint Against Rawdhar Team

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இப்ராகிம் ராவுத்தர் அணி செய்யும் இடையூறுகளால், பணியாளர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத நிலை உள்ளது. எனவே அவர்களை அப்புறப்படுத்த வேண்டும், என சங்கத்தின் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில், பொதுச்செயலாளர் பி.எல்.தேனப்பன் உள்பட சங்க நிர்வாகிகள் நேற்று பகல் 11 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியில் சென்றிருந்ததால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.

பின்னர் வெளியில் வந்தவுடன், எஸ்.ஏ.சந்திரசேகரன், நிருபர்களிடம் பேசுகையில், "எங்கள் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிராக சட்டவிரோதமாக இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி என்று சொல்லப்படுகிற அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பினர், எங்கள் சங்கத்தை செயல்படவிடாமல் இடையூறு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் வங்கி பண பரிவர்த்தனைகள் எதுவும் எங்கள் சங்கம் சார்பில் செய்ய முடியவில்லை. சம்பளம் கொடுக்க முடியவில்லை. யாருக்கும் உதவிகள் செய்ய இயலவில்லை. சங்க உறுப்பினர்களுக்கு கூட மருத்துவ உதவி போன்ற எதையும் செய்ய இயலாத நிலை உள்ளது.

இந்த நிலையில் எங்கள் சங்கத்தின் உறுப்பினர் ஜெயலட்சுமி, தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் செய்யும் நிர்வாகத்தில், அட்ஹாக் கமிட்டி என்று சொல்லிக்கொள்பவர்கள் எந்த இடையூறும் செய்யக் கூடாதென்று, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி உள்ளார்கள்.

எனவே ராவுத்தர் அணியினரை அப்புறப்படுத்தி, எங்கள் சங்கத்தின் அன்றாட பணிகள் நடந்திட உதவி செய்திடுமாறு கூடுதல் கமிஷனரை கேட்டுள்ளோம்," என்றார்.

 

Post a Comment