'துப்பாக்கி' பட ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் நடித்த விஜய்க்கு முட்டியில் காயம் ஏற்பட்டது. அதற்காக லண்டனில் சிகிச்சை பெறுகிறார் என்றார் இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'துப்பாக்கி'. சமீபத்தில் இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார் இயக்குனர். உயரமான இடத்திலிருந்து விஜய் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. உயரத்தில் இருந்து விஜய் குதித்த வேகத்தில் அவரது கால் இடறியது. இதில் தரையில் அவர் கால்மோதி முட்டியில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. தற்போது விஜய் குடும்பத்தினருடன் லண்டன் சென்றிருக்கிறார். அங்குள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுகிறார். இதுபற்றி முருகதாஸ் கூறும்போது,''சண்டை காட்சி படமாக்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. உயரத்தில் இருந்து குதித்தபோது கால் இடறி காயம் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்தது. கால் முட்டியில் வழக்கமாக அணியும் பாதுகாப்பு கவசத்தை அவர் அணியாமல் நடித்ததுதான் இதற்கு காரணம். ஆனாலும் குறிப்பிட்ட காட்சியை வலியோடு செய்து முடித்தார். காயத்துக்காக லண்டனில் சிகிச்சை பெறுகிறார்'' என்றார். இன்னும் 4 நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. லண்டனில் இருந்து விஜய் திரும்பியவுடன் அதில் நடிக்கிறார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
Post a Comment