மூன்று மாத குழந்தையாய் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜிதா. இன்றைக்கு மணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும் சின்னத்திரையில் கதாநாயகியாய் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் மருதாணி, மெகா தொலைக்காட்சியில் வாழ்வே மாயம், மலையாளத்தில் சீரியல் என சென்னை, கேரளா, ஆந்திரா என பிஸியாக இருக்கிறார். அவரை சிரமப்பட்டு பிடித்து சீரியல் வாழ்க்கை குறித்து கேட்டோம்.
சினிமாவை விட, "டிவி'யே எனக்கு சரின்னு பட்டது, இந்த பீல்ட்டு பற்றி நானெடுத்த முடிவு சரியா இருந்ததால வாழ்க்கையும் நல்லபடியா அமைஞ்சு சந்தோஷமாயிருக்கிறேன்'' என்று மகிழ்ச்சியோடு பேட்டியை தொடங்கினார்.
சென்னையிலதான் வீடு இருக்கு. ஆனா தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளிலும் சீரியல் இருப்பதால் சென்னையில் தொடர்ந்து தங்க முடியலை. கேரளா, ஆந்திரான்னு பறக்க வேண்டியதா போச்சு.என் கணவர் சென்னையில விளம்பர படக் கம்பெனி வச்சிருக்கார். சீரியல்கள்ல நல்ல வாய்ப்பு கிடைச்சதால ஒர்க் பண்ண அனுமதிச்சிருக்கார். நான் இங்கும் அங்குமா பறப்பதை பார்த்துட்டு உனக்கு சிரமாயிருந்ததுன்னா விட்டுடு. டெக்கனிக்கல் அயிட்டங்களை கத்துக்க கம்பெனிக்கும் உதவியா இருக்கும், உனக்கு கிடைக்கும் அனுபவம் பயனுள்ளதா இருக்கும்ன்னு சொன்னார். நடிப்பை தவிர வேறு எதிலும் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லாததால சீரியல்களுக்காக ஊர், ஊரா பறந்திட்டிருக்கேன்.
குழந்தையாக இருக்கும் போதே அம்மா என்னை சினிமாவில விட்டுட்டாங்க. நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். என்னோட என் அண்ணன் சுரேஷும் குழந்தையாக இருக்கும் போதே நடிக்க வந்துட்டான். ஹீரோயினியாக நடிக்கணும்ங்கிற ஆசை அப்போதே இல்லை. இருந்தாலும் எனக்கு 14 வயதிருக்கும் போது சினிமாவில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது. கிளாமரா நடிக்கணும்ன்னு சொன் னாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். படத்தில கூட கிளாமரா நடிக்க வேண் டாம். பப்ளிசிட்டிக்காக கிளாமரா போஸ் மட்டும் கொடுங்கன்னாங்க. உறுதியா மறுத்திட்டேன். சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது. ஹீரோயினாக நடிக்கணும்ன்னு நான் ஆசை படலை. ஏன்னா சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கணும்ங்கிற ஆசையில சினிமாவுக்கு நான் வரலை.?
ஏ.வி.எம்.., நிறுவனத்தின் ஐம்பதாம் ஆண்டுவிழாவுல சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது எனக்கும், எனது அண்ணன் சுரேஷிற்கும் கிடைச்சது. அப்போது அவங்க தயாரிச்ச "ஒரு பெண்ணின் கதை' சீரியலுக்கு 14 வயசுள்ள பெண் தேடிட்டிருந்தாங்க. என்னை பார்த்ததும் நடிக்க அழைச்சாங்க. கதையும் பிடிச்சிருந்தது. சரின்னு சொல்லிட்டு செஞ்சேன். தமிழ், மலையாளம், தெலுங்கு என சீரியல்களில் நான் நினைச்ச மாதிரி நிறைய வாய்ப்புகள் வந்தன. என்னோட கேரக்டர் நல்லபடியா எனக்கு பிடிச்ச மாதிரி அமைஞ்சதால நடிச்சேன். என்னை பார்ப்பவர்கள் மரியாதையாக பழகுறாங்க. அவுங்க குடும்பத்தில ஒருத்தங்க மாதிரி சினேகம் பாராட்டுறாங்க. சமீபத்தில ஒரு பாட்டி என்னை சந்திச்சப்ப கன்னத்தில முத்தமிட்டு வாழ்த்தினாங்க. சந்தோஷமாயிருந்தது.
நம்ம லைப் நம்ம கையில இருக்கு. நாம எப்படி செயல்படுறோமோ அப்படித்தான் லைப் இருக்கும். எதைச் செய்தாலும் யோசித்து செய்யணும். இருக்கும் "பாசிட்'டிவான சூழ் நிலைகளை பயன் படுத்திக்கிட ஆசைப்பட்டு "நெகட்டி'வான வேலைகள்ல இறங்கிடக் கூடாது. நமக்கு என்ன லிமிட்டோ அத்தோடு நின்னுக்கணும். இந்த நினைப்போடு எந்த வேலைக்கு போனாலும் பிரச்னை ஏதும் வராது. வந்தாலும் தைரியமா நின்னு ஜெயிக்கலாம்ன்னு தைரியம் தன்னால வரும்,'' என்று பொறுப்பாக சொன்னார் சுஜிதா. வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.
Post a Comment