'சகுனி': இதெல்லாம் நடக்கிற காரியமா?

|

Karthi Better Luck Next Time No Lo    | சகுனி பிரஸ் மீட் படங்கள்  

ரொம்ப நாளாச்சே தியேட்டருக்கு போயி படம் பார்த்து அப்படின்னு குடும்பத்தோட டிக்கெட் புக் பண்ணி சகுனி படத்துக்கு போனோம். 75 வயதான எங்க பாட்டி முதல் 5 வயதான என் தம்பி மகள் வரை நான்கு தலைமுறையினரும் ஒன்றாக போனது இந்த படமாகத்தான் இருக்கும்.

சகுனி பேரைக் கேட்ட உடனே பாட்டிக்கு மகாபாரதம் ஞாபகத்துக்கு வந்திருக்கணும் உடனே கிளம்பிட்டாங்க. அப்புறம்தான் இது அந்த சகுனியில்லை பருத்தி வீரன் கார்த்தி நடிச்ச சகுனி அப்படின்னு தெரிஞ்சு சைலன்ட்டாகிட்டாங்க.

அதென்னமோ தெரியலை தாத்தா, பாட்டி முதல் சின்ன வாண்டூஸ் வரைக்கும் கார்த்திக்கு ரசிகர் பட்டாளம் இருக்கு போல தியேட்டர் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது.

படம் ஆரம்பம் எல்லாம் அமர்க்களமாகத்தான் இருந்தது. பாட்டி வடை சுடுவதும் வடையை காக்காய்க்கு தூக்கி போடுவதும் ஹீரோ அறிமுகம் கொஞ்சம் புதுசுதான். ஆனால் கதைதான் ஜவ்வு இழுப்பு.

கதாநாயகன் அழகானவனாம் அதனால் எல்லா பொண்ணுங்களுக்கும் அவனைப் பார்த்த உடனே பிடித்து போகிறதாம்! (லேடி போலீஸ் அனுஷ்கா கூட கார்த்தியின் அழகில் மயங்கிப் போகிறாராம்) பாவம் அனுஷ்கா, ஆண்டிரியா. அதுவும் அனுஷ்கா சொல்லும் டயலாக் இருக்கே "எல்லா பொண்ணுங்களுக்கும் உங்களைப் பார்த்தா ரொம்ப பிடிக்கும்னு" வேற சொல்லிட்டு ஃபீலிங்ஸ் ஆப் இன்டியாவா ஒரு லுக் வேற விடுறாங்க என்ன கொடுமை சார் இது?.

அரசியல் படமா இருந்தாலும் படத்துல ஓரே ஒரு ஆறுதல் ஓவரா வெட்டுக்குத்து ரத்தம் இல்லை. அனுஷ்கா, ஆண்ட்ரியா, கிரன், பிரணீதா, ரோஜான்னு நடிச்சிருந்தும் யாரும் அதீத கவர்ச்சியாக உடை அணியவில்லை. ஒரே ஒருசீன் மட்டும் அதுவும் ஹீரோவின் கனவில் பிரணிதா லாங் சாட்டில் கொஞ்சமே கொஞ்சம் கவர்ச்சி உடை அணிந்து நடனமாடுகிறார். ஆனால் ஒரே குடி மயம்தான் குடிப்பதற்கு காரணத்தைக்கூறி அதற்கு விளக்கமும் தருகிறார்கள். அதனால்தான் படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இடைவேளையின் போது இனி "சகுனி ஆட்டம் ஆரம்பம்" என்று கார்டு போடுகிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் விறுவிறுப்பு இல்லையே. இயக்குநருக்கு முதல்படம் என்பதால் விட்டு விடலாம் என்றாலும் முடியாது. ஏனென்றால் ஷங்கர் தன்னுடைய முதல் படத்தில்தான் தான் யார் என்பதை நிரூபித்தார்.

கந்து வட்டி ரமணி ஆச்சி கவுன்சிலர் ஆவது ஓ.கே ஆனால் அவரையே மேயர் ஆக்குவதுதான் கொஞ்சம் நெருடல். இப்போதான் மேயரையும் மக்கள் ஓட்டுப் போட்டுதானே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தார் இயக்குநர்?.

அதெப்படி இவருடைய படத்தில் மட்டும் அடிக்கடி தேர்தல் வருகிறது? படத்தின் ஆரம்பத்தில் ஒரு சட்டமன்றத் தேர்தல் என்றால் முடியும் போதும் ஒரு சட்டமன்ற தேர்தல் வருகிறது எப்படி? அப்படி பார்த்தால் கார்த்தி காரைக்குடியில் இருந்து வந்ததாக கூறிய ஃப்ளாஸ்பேக்கிற்கும் இந்த தேர்தலுக்கும் திரைக்கதையில் எங்கேயோ இடிக்கிறதே?.

எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் இருந்தாலும் சாதாரண கஞ்சா கேஸ் கைதியுடனா சிறையில் இருப்பார்?. அவர் எதற்காக உள்ளே போனார்? எப்படி வெளியே வந்தார் என்பதைப் பற்றி எல்லாம் கதையில் இல்லை. இப்படி சின்ன சின்ன சொதப்பல்கள் சகுனியில் இருக்கத்தான் செய்கிறது.

இதுபோன்ற நெருடல்களை எல்லாம் திரைக்கதையின் மூலம், பாடல்களின் மூலம் விறுவிறுப்பு கூட்டியிருக்கிலாம் ஆனால் இயக்குநர் அதை செய்யத் தவறிவிட்டார் என்பதுதான் ரசிகர்களின் கருத்து.

படம் முடிந்து வரும்போது என் முன்னால் உட்கார்ந்திருந்தவர்கள் காதை தடவிப் பார்த்துக் கொண்டார்கள். என்ன சார் என்ன ஆச்சு? என்ற கேட்டதற்கு எல்லோரும் காதில் பூ வைப்பார்கள். இவர்கள் முழம் பூவையே சுற்றிவிட்டர்கள் என்று கூறியபடி சென்றனர்.

எது எப்படியோ சென்டிமென்டலாக ஹீரோக்கள் திருமணம் முடிந்த உடன் நடிக்கும் முதல் படம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும் என்பது கார்த்தி விஷயத்திலும் உண்மைதான் போலிருக்கிறது...

 

+ comments + 1 comments

Anonymous
1 July 2012 at 16:22

Mokkai......

Post a Comment