ஷங்கரின் அடுத்த படத் தலைப்பு 'ஐ'. இந்த செய்தியை முதலில் தெரிவித்தது ஒன்இந்தியா தமிழ்தான். படம் தொடர்பான மற்ற விவரங்களை இப்போது ஷங்கரின் செய்தித் தொடர்பாளர் அனுப்பியுள்ளார்.
ஐ படத்தில் விக்ரம் - சமந்தா ஜோடி. இந்தப் படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனும் பிரபல தயாரிப்பாளருமான ராம்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பது. ராம்குமார் இதற்கு முன் அறுவடை நாள் படத்தில் கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையாக நடித்தார். அதன் பிறகு நடிக்கவில்லை.
பரடத்தின் இன்னொரு பிரதான வேடத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார்.
ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் முதல்முறையாக ஷங்கர் இணையும் படம் இது.
காமெடிக்கு சந்தானம் கைகோர்க்கிறார்.
ஐ என்பதற்கு - ஐந்து என்பதைத் தவிர, அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை, எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளன. இவற்றின் கலவையாக இந்தப் படம் உருவாகிறது, என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில் மென் இன் பிளாக் சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட், கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகளை வடிவமைக்கிறார்.
ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைசிங் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் பகுதிகளை உருவாக்குகிறது.
ஹாலிவுட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள்.
சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவைச் சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள்.
இது அரசியல் படம் அல்ல... ரொமான்ட்டிக் த்ரில்லர் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர். படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இந்த படத்துக்கு வசனம் எழுதுவதன் மூலம் இரட்டை எழுத்தாளர்கள் சுபா முதல் முறையாக ஷங்கருடன் இணைகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
Post a Comment