மோகன்லால் வீட்டில் யானை தந்தம் - போலீஸ் விசாரணை!

|

Recovery Tusks House Mohan Lal Trouble

மலையாள பட உலகின் முன்னணி நடிகர் மோகன் லால் வீட்டு பூஜை அறையில் யானை தந்தங்கள் இருந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வீட்டில் கடந்த வருடம் இறுதியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கேரளா மட்டுமின்றி சென்னையில் உள்ள இருவரின் வீடுகளிலும் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கு உரிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள மோகன்லாலின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொச்சி தேவரையில் உள்ள மோகன்லால் வீட்டின் பூஜை அறையில் யானை தந்தங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூசிடம் விசாரணை நடத்துமாறு வருமானவரித் துறையினர் மனு கொடுத்தனர்.

இதையடுத்து நடிகர் மோகன்லாலிடம் போலீஸ் விசாரணை நடத்துவதற்கு கொச்சி போலீஸ் கமிஷனர் பிஜூ அலெக்சாண்டர் தலைமையில் தனி கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி மோகன்லாலிடம் விசாரணை நடத்த தற்போது முடிவு செய்துள்ளது. இதன்படி மோகன்லால் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட யானை தந்தம் அலங்காரத்துக்கு வைக்கப்படும் வர்ணம் பூசிய பிளாஸ்டிக் வகையை சேர்ந்ததா? அல்லது உண்மையான யானை தந்தமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் பிஜூ அலெக்சாண்டர் கூறுகையில் நடிகர் மோகன்லால் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட யானை தந்தம் உண்மையானதாக இருந்தால் அதை அவர் யாரிடம் இருந்து வாங்கினார்? அதற்குரிய உரிமம் அவரிடம் உள்ளதா? அல்லது கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படும். அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும்," என்றார்.

 

Post a Comment