ஒரு 'மலரின்' பயணம்... நாதஸ்வரம் ஸ்ரிதிகாவின் 'நச்' பேட்டி!

|

Nadaswaram Srithika Opens Her Mind

நாதஸ்வரம் தொடரில் மலர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துக்கொண்டிருக்கும் கதாநாயகி ஸ்ரிதிகா சின்னத்திரைக்கு புதியவரல்ல. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய அவர் பெரியதிரையில் கதாநாயகியாக நடித்து பின்னர் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.

டிவி, சினிமா என இரண்டிலுமே வெற்றிகரமான பயணத்தை தொடக்கியுள்ள நடிகை ஸ்ரிதிகாவிடம் அவர் பயணம் செய்த பாதையை பற்றி கேட்கலாம்.

''நாதஸ்வரம் தொடர்ல கமிட் ஆகி ரெண்டு வருஷம் ஆகப்போகுது. நாட்கள் ஓடினதே தெரியல. 'நாதஸ்வரம்' சீரியல் ஷூட்டிங் முழுக்க முழுக்க காரைக்குடியிலயே நடக்கறதால, சென்னைக்கு அப்பப்போதான் வர முடியுது. வர்ற நேரத்துல ஷாப்பிங், தியேட்டர்னு ஒரே ரவுண்ட்ஸ்தான்!.

எங்கப்பா மலேசியாவில பிஸினஸ் செய்துட்டு இருந்ததால, ப்ளஸ் டூ வரை அங்கதான் படிச்சேன். அப்புறம் எங்க குடும்பம் சென்னைக்கு ஷிஃப்ட் ஆச்சு. எங்கக்கா சுதா, டிகிரி முடிச்சுட்டு ஒரு சேனல்ல தொகுப்பாளினியா சேர்ந்தாங்க. அவங்களோட கான்டாக்ட்ஸால எனக்கும் ஆங்கர், விளம்பரங்கள், வாய்ப்பு கிடைச்சது.

தற்போது நான், அம்மா, அக்கா மூவரும் சென்னையிலேயே தங்கிவிட்டோம். அப்பா மட்டும் அடிக்கடி மலேசியா சென்று வருகிறார்.

நிகழ்ச்சி தொகுப்பு, தவிர நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தேன். அதன் பிறகுதான் பெரியதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது சின்னதிரை,பெரியதிரை இரண்டிலும் நடிக்கிறேன். "வெண்ணிலா கபடி குழு' படத்தில் நான் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தேன். அதற்கடுத்து "மதுரை டூ தேனி' படத்திலும் நடித்திருக்கிறேன்.

"வெண்ணிலா கபடி குழு' படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர்தான் "நாதஸ்வரம்' தொடருக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர். அவர் மூலமாகத்தான் இந்தத் தொடரில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இயக்குநர் திருமுருகன் பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அந்த அளவுக்கு வெற்றிகரமாக ஓடிய தொடர்களை இயக்கியவர். அவருடைய டைரக்ஷனில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தத் தொடரில் எனக்கு ரொம்ப சாஃப்ட்டான நேச்சர் உள்ள பாத்திரம். அதேசமயம் என்னோட ஒர்க்ல ரொம்ப பெர்பக்ட்டா இருக்கிற மாதிரியான கேரக்டர்.

படப்பிடிப்பில் வேலைப் பளுவே தெரியாமல் ரொம்ப ரிலாக்ஸாக ஒரு குடும்பத்துல இருப்பது போல இருக்கு. குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக எப்படி நடந்து கொள்வது என்று இப்போதே ட்ரெயினிங் எடுத்துக்கொள்ளலாம்.

"நாதஸ்வரம்' தொடரில் மலர் கதாபாத்திரம் நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது. நிறைய பேர் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். இங்கு இருப்பது போலவே மலேசியாவிலும் தமிழ் தொடர்களுக்கு நிறைய வரவேற்பிருக்கிறது. மலேசியர்கள், தமிழ் தொடர்களை விரும்பிப் பார்க்கிறார்கள்.

என் நண்பர்கள் எல்லாம் நான் நடிக்கும் தொடரைப் பார்த்துவிட்டு எப்படியிருந்தது என்று போன் செய்து சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தார் மலர்.

 

Post a Comment