வெள்ளித்திரை டாக்கீஸ் சார்பில் முஜீப், ஏ.ஆர்.சூரியன் தயாரிக்கும் படம் 'முதல் தகவல் அறிக்கை'. ராயன், கல்பனா ஜெயம் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராஜபார்த்திபன் ஒளிப்பதிவு. ரவிராகவ் இசை அமைத்துள்ளார். பா.ராஜகணேசன் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலுமகேந்திரா பாடல்களை வெளியிட்டு பேசியதாவது: சினிமாவில் வியாபார படங்கள், கலைப் படங்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லாமே வியாபார படங்கள்தான். வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே வியாபார படங்கள்தான். சினிமா வியாபாரம் என்பது பால் வியாபாரம் போன்றது. கன்றுக்குட்டி குடிக்க வேண்டிய பாலை கறந்து விற்க துணிந்து விட்ட பிறகு அது வியாபாரம் தான். அந்த பாலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கலக்காமல் வியாபாரம் செய்யாமல், சரிக்கு சரி தண்ணீர் கலந்து வியாபாரம் செய்யலாம். தண்ணீரில் பாலை கலந்து வியாபாரம் செய்யலாம். அது மாதிரிதான் சினிமாவும். அதில் எந்த அளவுக்கு தண்ணீர் கலக்குகிறீர்கள் என்பதை பொறுத்து அதன் தரம் நிர்ணயம் செய்யப்படும். குறைந்த அளவு தண்ணீர் கலந்து வியாபாரம் செய்யுங்கள்; அது நியாயமான வியாபாரமாக இருக்கும். வணிக சினிமாவுக்குள் இருந்து கொண்டே அற்புதங்களை படைக்கலாம். அதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். முன்னதாக, படத்தின் இயக்குனர் ராஜகணேசன் வரவேற்றார் முடிவில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.சூரியன் நன்றி கூறினார்.
Post a Comment