மறுபடியும் ஒரு காதல் - 'பார்த்த கதை, பார்க்காத கோணத்தில்!'

|

Marupadiyum Oru Kathal Preview

ஒரு முறை மலேசியா போயிருந்தபோது, ஜெர்மன் வாழ் தமிழரைச் சந்தித்தேன். அவர் இலங்கையைச் சேர்ந்தவர். என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, அவரது கதையைச் சொன்னார். திருமணமாகி, குழந்தையெல்லாம் பிறந்து பல ஆண்டுகளுக்குப் பின் தன் முதல் காதலி பற்றி மனைவியிடம் சொல்கிறார். அதாவது முகம் பார்க்காத காதலி.

மனைவிக்கு பதட்டம். முழு கதையையும் சொல்லி முடித்த பிறகு ஆச்சர்யம்... அப்போது கணவனிடம் மனைவி சொல்கிறார்... அந்த முதல் காதலியே நான்தான்," என்று. இப்படி ஒரு சுவாரஸ்யமான முடிச்சை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம்தான் மறுபடியும் ஒரு காதல்," என்று ஆரம்பித்தார் இயக்குநர் வாசு பாஸ்கர்.

இதற்கு முன் வேதா என்ற படத்தைத் தயாரித்தவர் வாசு பாஸ்கர். இப்போது இயக்குநராக மாறியிருக்கிறார்.

மறுபடியும் ஒரு காதல் படத்தில் விசேஷம், வடிவேலு. தேர்தலுக்கு முன்பே அவர் நடித்த படம்தான் என்றாலும், அதற்குப் பிறகு அவர் தொடர்பான காட்சிகளை மெருகேற்றியுள்ளார்களாம்.

சஞ்சனா சிங் அதிகபட்ச கவர்ச்சியுடன் போடும் குத்தாட்டத்துடன்தான் படமே ஆரம்பிக்கிறதாம்.

அனிருத் கதாநாயகனாகவும், லண்டன் பெண் ஜோஷ்னா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள் (லண்டன் பெண் என்பதற்காக தெரிந்த தமிழையும் தெரியாத ஆங்கிலம் மாதிரியே பேசுகிறார் அம்மணி!)

'நல்ல பாடல்கள், குலுங்க வைக்கும் நகைச்சுவை, சுவாரஸ்யமான திரைக்கதை... இவை எல்லாமே இந்த்ப படத்தில் பார்க்கலாம். கதை வழக்கமான காதல்தான் என்றாலும், எடுத்துள்ள விதத்தில்தான் இந்தப் படம் உங்கள் மனதில் நிற்கப் போகிறது', என்றார் வாசு பாஸ்கர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது மறுபடியும் ஒரு காதல்!

 

Post a Comment