திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் குரலில் பேசி பணம் பறித்த தினேஷ் குமார் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் ஆகியோரின் குரல்களிலும் பேசி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் குரலில் பேசி பணம் பறித்து வந்த தினேஷ்குமார்(21) என்பவரையும், அவரது நண்பர் மணியையும் போலீசார் கைது செய்தனர். தினேஷ் குமார் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திமுக மாவட்ட மகளிர் அணி செயலாளரின் தூண்டுதலின்பேரிலேயே தான் பல குரல்களில் பேச மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல குரல்களில் பேசி 6 முன்னாள் அமைச்சர்களிடம் வேலைவாய்ப்பு உள்பட பல காரியங்களை அந்த மகளிர் அணி நிர்வாகி சாதித்துக் கொண்டதாகவும், இந்த மோசடி 2 ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா இணை இயக்குனரான குமரேசன் என்பவரை தொடர்பு கொண்ட தினேஷ்குமார் தான் கிருத்திகா உதயநிதியின் தம்பி என்று கூறி அவருக்கு உதவி இயக்குனர் பணி வாங்கித் தருவதாக உறுதியளித்து ரூ.1 லட்சம் கேட்டு அதில் ரூ50,000 பெற்று ஏமாற்றினார். மீதமுள்ள ரூ. 50,000த்தை பெற வந்தபோது தான் அவர் போலீசில் சிக்கினார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், நடிகைகள் த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ரேயா ஆகியோரின் குரல்களிலும் பேசி நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பலரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இன்னும் எத்தனை பேரிடம் அவர் மோசடி செய்துள்ளார் என்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே அவருக்கு மாத சம்பளம் கொடுத்து மோசடி செய்ய வைத்த திருச்சியைச் சேர்ந்த திமுக மகளிர் அணி செயலாளர் நூர்ஜகான் பேகத்தைப் பிடிக்க தனிப்படை திருச்சி விரைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment