காசு கொடுத்து தங்களை நம்பர் ஒன் என சர்வே பண்ண வைக்கும் தொலைக்காட்சிகள்!

|

உரக்க உண்மை சொல்வதாக சொல்வதாக தமுக்கடித்துக் கொள்ளும் சில தொலைக்காட்சிகள், தங்களை முதல் நிலையில் உள்ளதாகக் காட்ட டெல்லி வரை போய் செய்யும் சில மூன்றாம் தர வேலைகள் சந்திக்கு வந்து சிரிப்பாய் சிரிக்க ஆரம்பித்துள்ளன.

தேசிய அளவில் 'சர்வே' என்ற பெயரில் தனிப்பட்ட சிலருக்காக பிஆர் வேலை பார்க்கும் சில ஏஜென்சிகள்தான் இதன் சூத்திரதாரிகள்.

கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல், இந்த மாதிரி ஏஜென்சிகளிடம் கொட்டிக் கொடுத்து டுபாக்கூர் சர்வேக்களை நடத்த வைக்கின்றனர் சேனல் முதலாளிகள் (ஓடாத படத்துக்கு பைனான்ஸ் செய்து, லாபம் வந்ததாகக் காட்டும் கோல்மால்கள் தனிக் கதை!).

அப்படி நடத்தப்பட்ட சர்வேக்கள் எந்த காலகட்டத்தில், எந்தெந்த பகுதிகளில் நடத்தப்பட்டன என்ற விவரங்களோ ஆதாரங்களோ தரப்படாமலேயே, 'இந்த சேனல்தான் தமிழின் நம்பர் ஒன்' என அறிவிக்கிறார்கள்.

இதன் மூலம் பணரீதியான ஆதாயம் வருகிறதோ இல்லையோ... அரசியல் சார்ந்த ஆதாயங்கள் நிறையவே கிடைக்கின்றன இவர்களுக்கு.

கிராமங்களில் உள்ளவர்களால் சரியாக உச்சரிக்கக்கூட தெரியாத, எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத ஒரு சேனலுக்கு நம்பர் ஒன் அந்தஸ்தைத் தந்து, அதை மற்ற மீடியாக்களும் வெளியிட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சேனல்காரர்கள் மூலம் கிடைக்கும் வேறு வகை ஆதாயங்கள், அரசியல் மாச்சரியங்களுக்காக இந்த பொய்யை சில முன்னணி செய்தி நிறுவனங்கள் பிரதானப்படுத்துவதும் நடக்கிறது.

சேனலின் இந்த தகிடுதத்தத்தைப் பார்த்த பழைய சேனல்காரர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா... இவர்கள் படித்த கல்லூரியில் பிரின்சிபாலாக இருந்தவர்கள் அல்லவா அவர்கள்...

என்றும் எங்கும் எப்போதும் நம்பர் ஒன் நாங்களே என்ற புதிய முழக்கம், மற்றும் அதே ஸ்டைல் சர்வே முடிவுகளோடு களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர்.

 

Post a Comment