கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம், 'பொன்மாலைப் பொழுது'. ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். ஏ.ஜி.கிரியேஷன் சார்பில் கே.அமிர்தகவுரி தயாரிக்கிறார். ஏ.சி.துரை இயக்குகிறார். சி.சத்யா இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கமல்ஹாசன் பாடல்களை வெளியிட்டுப் பேசியதாவது: கண்ணதாசனின் பேரனை ஆதரித்துப் போற்ற வேண்டியது என் போன்றவர்களின் கடன், கடமை. எனக்கு இலவசமாக தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களில் ஒருவர் கண்ணதாசன். அவரையெல்லாம் தொட்டுப்பார்த்து பூரிப்படைந்த காலங்கள் உண்டு. அவருடைய பேரன் சினிமாவுக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் அவரை கைதட்டி வரவேற்பார்கள். ரசிகர்களுடைய கைதட்டலின் சக்தி அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால், அதுதான் கலைஞனுக்கு டானிக். 'விஸ்வரூபம்' வெளிவரும் வரை எந்த விழாவிலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். அதற்காக, இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது. ஹீரோவின் தந்தை மறைந்த கலைவாணன் கண்ணதாசன் என் நண்பர். அவர் சார்பில் நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். விழாவில் வைரமுத்து, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், ஜி.என்.ஆர்.குமரவேலன், தயாரிப்பாளர் டி.சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இணை தயாரிப்பாளர் சத்ய லட்சுமி வரவேற்றார். முடிவில் இயக்குனர் ஏ.சி.துரை நன்றி கூறினார்.
Post a Comment