பிரபு தேவாவுக்கு மயக்கம் தெளிய வேண்டும் - கே பாக்யராஜ்

|

Yen Indha Mayakkam Audio Launch

இப்போதெல்லாம், எந்த படத் துவக்க விழா அல்லது ஆடியோ வெளியீட்டு விழாவாக இருந்தாலும் சிறப்பு விருந்தினர் கே பாக்யராஜ்தான். அவரது பேச்சில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இருக்காது.

ரெயின்போ கிரியேஷன்ஸ் சார்பில் ஆண்டனி எட்வர்டு தயாரிக்கும் 'ஏன் இந்த மயக்கம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் தன் பாணியில் பேசி வந்திருந்தவர்களை வசீகரித்தார் பாக்யராஜ்.

விழாவில் பிரவுதேவாவும் கலந்து கொண்டார்.

பாக்யராஜ் பேசுகையில், "இந்தக் காலத்தில் யார் நடித்தால் படம் வியாபாரமாகும் என்று படத்துக்கு உத்திரவாதம் பார்ப்பார்கள். புதுமுகங்களை வைத்து உருவாகும் இப்படிப்பட்ட படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம். ஆனால் தயாரிப்பாளர் எட்வர்டு ஆன்டனி துணிந்து முன்வந்துள்ளார். அந்த வாய்ப்பை இயக்குநரும் மற்றவர்களும் காப்பாற்ற வேண்டும்.

இந்தப் படத்தை இயக்கியுள்ள ஷக்தி வசந்த பிரபு இயக்குநர் பிரபு தேவாவிடம் பணியாற்றியவர் என்பதை அறிந்து சந்தோஷம். இவ்வளவு பிஸியான நேரத்தில் பிரவு தேவா தன் உதவியாளருக்காக இங்கு வந்திருப்பதிலிருந்து எந்த அளவுக்கு ஷக்தி வசந்த பிரபு தான் இயக்குநரிடம் பெயர் வாங்கியிருக்கிறார் என்பது புரியும்.

படத்தின் தலைப்பைப் பார்த்தும் பிரபுதேவாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. பிரபுதேவா இன்னும் பத்து வருஷம் தமிழ்நாட்டு பக்கம் வரமாட்டார் என்று சொல்கிறார்கள். அவரது மயக்கம் தெளிய வேண்டும். அவரது இயக்கத்தில் தமிழில் வருஷம் இரண்டு படங்கள் வரவேண்டும்," என்றார்.

முன்னதாக பிரபுதேவா பேசும போது 'இந்த ஷக்தி வசந்த பிரபுவின் பெயர் என்னைப் பொறுத்த வரை கலை என்பதுதான். கலை... கலை என்றுதான் நான் கூப்பிடுவேன். இவர் பயங்கர உழைப்பாளி. இரவு பகல் என்று பார்க்காமல் கடுமையாக உழைப்பவர். அதை நேரில் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர் படமெடுத்திருக்கிறார். நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள். மீண்டும் இப்படத்தின் வெற்றி விழாவில் சந்திப்பேன்," என்றார்.

முன்னதாக 'ஏன் இந்த மயக்கம்' ஆடியோவை பிரபுதேவா வெளியிட இயக்குநர்கள் பாக்யராஜ்,தருண் கோபி பெற்று கொண்டனர்.

 

Post a Comment