கிராமத்தில் பிறந்ததற்காக மாணவர்கள் வெட்கப்படக் கூடாது!- சிவகுமார்

|

Village Students Must Be Proud Says Sivakumar

கிராமத்தில் பிறந்துவிட்டோமே என்று மாணவர்கள் வருத்தப்பட வேண்டாம். அது பெருமைதான். எங்கு பிறந்தாலும் இளமையிலிருந்து ஒழுக்கத்துடன் இருந்தால் நிச்சயம் உயர்ந்த இடம் கிடைக்கும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

கோவையை அடுத்த சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை சார்பில், அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர் பரிசுகள் வழங்கினார்.

இந்த அறக்கட்டளைக்கு தலைவரும் சிவகுமார்தான். இங்குதான் அவர் படித்தார். விழாவில் அவர் பேசுகையில், "கிராமப் பகுதிகளில் ஏழையாகப் பிறந்துவிட்டோமே என வருத்தப்பட வேண்டாம்.

அதில் எந்த வித பாவமோ சாபமோ இல்லை. சொல்லப் போனால் இதற்காக சந்தோஷப்படுங்கள். மேதை ஆகவேண்டுமென்றால், உழைப்பின் மகத்துவம் தெரிய வேண்டும் என்றால் கிராமத்தில் பிறந்திருக்க வேண்டும் என எண்ணிக்கொள்ள வேண்டும்.

படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அனைவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. நீங்கள் முயற்சி செய்தால் அந்த திறமையை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.

அனைத்து துறையிலும் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒழுக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும். ஒழுக்கம் ஒன்றுதான் அனைவரையும் காப்பாற்றும்.

பெற்றோர்களையும், உங்களுக்கு நல்வழிகாட்டும் ஆசிரியர்களையும் வாழ்நாளில் மறக்கவே கூடாது," என்றார்.

 

Post a Comment