இளையராஜா இசையில் டிஜிட்டலில் மீண்டும் வரும் 'காமராஜ்'!

|

Kamaraj Movie Be Re Released On His Birth Anniversary

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, 2004-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ. பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய இந்தப் படம், 2004-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதை பெற்றது. இப்போது அந்த படம், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, பல புதிய காட்சிகளோடு மீண்டும் திரைக்கு வருகிறது.

காமராஜரின் 110-வது பிறந்ததினமான ஜுலை 15-ல் திரையிடவிருக்கிறார்கள்.

இதுகுறித்து இயக்குநர் அ பாலகிருஷ்ணன் கூறுகையில், "காமராஜர் இந்திய விடுதலைக்காக, காந்தியின் வழி நின்று 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். மூன்று முறை முதல்வராக இருந்து பொற்கால ஆட்சியைத் தந்தவர். இரண்டு முறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து, நாடு முழுவதும் புகழ் பெற்றவர். பாரத ரத்னா விருது பெற்றவர்.

காந்தியவாதியான இவர், இறுதிக்காலம் வரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர். அவர் மறைந்தபோது அவரிடம் இருந்த சொத்து ரூ.110 மட்டுமே.

தற்போது நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அது, இளைஞர்கள் மத்தியில் மாற்று அரசியல் குறித்த சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காமராஜரின் நேர்மை, எளிமை, அரசியல் ஆளுமை, நிர்வாக செயல்பாடுகள் குறித்து இன்றைய இளைஞர்கள் அறியும்போது, அது அவர்களுக்கு சிறந்த அரசியல் வழிகாட்டியாக அமையும். நாட்டை வழிநடத்த உதவும்.

இதற்கென தற்போது புதிதாக 15 காட்சிகள் கணினி வரைகலை (கிராபிக்ஸ்) துணையுடன் படமாக்கப்பட்டு வருகிறது. காமராஜரின் ரஷ்யப் பயணம் இணைக்கப்பட்டுள்ளது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன், டி.டி.எஸ். ஒலி அமைப்பு மற்றும் புதிய பரிமாணத்துடன் இளையராஜா இசையில் உருவாகி வருகிறது.

ஜுலை 15-ந் தேதி இந்தப் படம் மீண்டும் திரைக்கு வரும்,'' என்றார்.

 

Post a Comment