போல்டான கேரக்டரில் நடிக்க ஆசை: 'திருமதி செல்வம்' அபிதா

|

I Want Act Bold Character Abitha

திருமதி செவ்வம் தொடரில் அப்பாவி அர்ச்சனாவாக வந்து பெண்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் அபிதா. இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் பெற்றிருக்கும் அபிதா தன் சொந்த வாழ்க்கையில் எப்படி? அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

பொறுப்பான குடும்பத் தலைவன் செல்வத்துக்கு ரொம்ப சாஃப்ட்டான திருமதி நான். மிடில் கிளாஸ் குடும்பமா இருந்து இப்போ கோடீஸ்வர குடும்பமா மாறியிருக்கோம். இந்தத் தொடரைப் பார்த்தீங்கன்னா நிறையக் குடும்பங்களில் நடக்கிற நிஜ சம்பவம் போலவே இருக்கிறது என்று நிறையப் பேர்போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். இன்ப,துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அதைத்தான் திருமதிசெல்வம் சொல்கிறது.

இந்தத் தொடரைப் பொறுத்தவரை எனக்கு எப்பவுமே சலிப்பு வந்ததில்லை. அவ்வளவு எதார்த்தமான கதை இது. நாம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளும், சந்தோஷத்தையும், துக்கத்தையும் கண்முன்னே கொண்டு வருவதால் ரசிகர்களின் வரவேற்பு இந்தத் தொடருக்கு அதிகம் கிடைக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் நான் ஆக்ஸிடென்ட்ல இறந்து போயிட்டதா ஒரு வதந்தி வந்ததல்லவா? அப்போது பார்த்தீங்கன்னா நிறைய பேர் அழுதுகிட்டே எனக்கு போன் செய்து விசாரித்தார்கள். அதுபோல சென்னை கோயிலில் ஓர் அம்மா கையில் சூடம் ஏற்றி பூஜை செய்தார்களாம். அப்போது அங்கு சென்ற இன்னோர் அம்மா அதைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரித்திருக்கிறார்கள் அதற்கு அந்தம்மா சொன்னார்களாம். திருமதி செல்வம் தொடரில் வரும் அர்ச்சனாவுக்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டதாம். அவங்களுக்கு எதுவும் ஆகாமல் நல்ல படியா பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நான் இங்கு சூட்டிங் வந்த பிறகு இந்த விஷயத்தை எங்களுக்குப் போன் மூலம் அம்மா தெரிவித்தார்கள். கேட்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த ஆடியன்ஸ் எல்லாம் எப்படி என்னை அவர்கள் வீட்டு பெண்ணைப் போல பாவிக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒவ்வொருநாளும் இதைவிட இன்னும் நல்லா செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வருகிறதே தவிர, சலிப்பு ஏற்பட்டதில்லை.

அர்ச்சனா கேரக்டரைப் போன்றுதான் நான். அதனால்தான் தொடரில் என்னால் எளிதாக நடிக்க முடிக்கிறது. அதைத் தவிர இந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு நிறையப் பேர் போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். எங்க வீட்டில் நடப்பது போன்று இருக்கிறது. அல்லது அக்கம் பக்கத்து வீட்டு ஆட்களைப் பற்றி சொல்லுவது போல இருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றபடி ஸ்பாட்ல டைரக்டர் என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்கிறேன்.

கேரளாவில் இருந்து சூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்து போவது ஆரம்பத்தில்தான் சிரமம் தெரிந்தது, இப்பொழுது பழகிவிட்டது. சூட்டிங் இல்லாத நாட்களில் கேரளாவில் என் குழந்தையோடு தான்இருப்பேன். எனக்கு ஒய்வு நேரம் எல்லாம் கிடைப்பதே இல்லைங்க. வீட்டில் இருந்தால் குழந்தையோடவே நேரம் சரியாக இருக்கும். அதே போல வீட்டில் இருக்கும் பொழுது நான்தான் சமையல் வேலைகளை எல்லாம் கவனிப்பேன். நன்றாகச் சமைக்கவும் செய்வேன். மற்றபடி சூட்டிங் சென்றுவிடுவேன்.

எனக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். மூன்று பேருமே திருமணமாகி கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். நான் நாலாவது பெண். அம்மா என்னோட தான் இருக்கிறார்கள். என் கணவர் சுனில். என் குழந்தை பேரு அல்சா. என் கணவர் ஒரு பிஸினஸ்மேன் என்பதனால் அவரோடு இணைந்து நானும் ஏதாவது பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றபடி வருங்கால திட்டம் என்று எதுவும் கிடையாது. எனக்கு சின்ன குழந்தை இருப்பதால் சினிமாவில் கொஞ்சநாள் கழித்து நடிக்கலாம் என்று காத்திருக்கிறேன். நல்ல பேனர்ல, நல்ல கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் அபிதா.

அமைதியான அர்ச்சனாவிற்கு படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போன்ற போல்டான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம். அது போல நல்லா சண்டை போடுவது போல் நெகட்டீவ் கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறதாம்.

அப்ப கூடிய சீக்கிரம் இன்னொரு நீலாம்பரியை பார்க்கலாம்.

 

Post a Comment