ஃபெப்சி தலைவர் பதவிக்கு இயக்குநர் அமீர் போட்டி - இன்று வேட்புமனு தாக்கல்!

|

Ameer Files Nomination Papers Fefsi President Election
சென்னை: தமிழ் சினிமாவின் பலமிக்க தொழிலாளர் அமைப்பான பெப்சியியின் தலைவர் பதவிக்கு இயக்குநர் அமீர் போட்டியிடுகிறார்.

இதற்காக அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

23 சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெப்சிக்கு தற்போது ராமதுரை தலைவராகவும், ஜி சிவா செயலாளராகவும் உள்ளனர்.

ஃபெப்சி தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச, ஊதியக் குழுத் தலைவராக சில மாதங்களுக்கு முன் இயக்குநர் அமீர் நியமிக்கப்பட்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் போதுதான் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து கொண்டே, தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அமீர் என்று தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தொழிலாளர்களை தனது தனிப்பட்ட பகையைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்துவதாகக் கூறி அமீர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, அமீர் சிறிது நாட்கள் அமைதிகாத்தார். இன்னொரு பக்கம், இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்து, பல்வேறு சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த களேபரங்களால் ஊதிய சீரமைப்பு விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் ஃபெப்சிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடக்கும் என சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

இந்தத் தேர்தலில் பெப்சி தலைவர் பதவிக்கு இயக்குநர் அமீரே போட்டியிடுகிறார். தனது வேட்பு மனுவை இன்று அவர் ஃபெப்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

அவருக்கு இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், வெற்றிமாறன், ஜி சிவா உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

Post a Comment