சொதப்பல் சீரியல்களுக்கு உடனுக்குடன் 'ஆப்பு' வைக்கும் சானல்கள்!

|

Lackluster Serials Get The Axe

தொலைக்காட்சி சீரியல்களின் ஆயுளை நிர்ணயிப்பவை அதன் டிஆர்பி ரேட்டிங்தான். எந்த தொடருக்கு வரவேற்பு இல்லையோ அதை பாதியிலேயே நிறுத்தவும் தயங்கமாட்டார்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

சேனல்களுக்கு டிஆர்பிதான் முக்கியம். நெடுந்தொடரோ, நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் மக்களிடம் வரவேற்பு இல்லாத பட்சத்தில் அதை பாதியிலேயே தூக்கிப் போட்டு விடுகின்றனர்.

அதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் ராஜேஸ், மீராகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த ஆண்பாவம் தொடர். இது இரவு பத்து மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நான்கு ஆண்குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின் கதை. ஆராவாரமாக முன்னோட்டத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால் கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் இயக்குநர் தடுமாறிப்போனாரோ என்னவோ எதிர்பாராத விதமாக தொடருக்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.

என்ன நடக்கிறது என்பதே இதுவரை யாருக்கும் புரியாத நிலையிலும் கூட, ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் அத்திப்பூக்கள் போன்ற தொடர்களுக்கு மத்தியில், ஆறுமாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாத ஆண்பாவம் தொடர் கடைசியில் அய்யோபாவம் என்றாகிவிட்டது.

இது மட்டுமல்ல நகைச்சுவை என்ற பெயரில் சன் தொலைக்காட்சியில் ஞாயிறுக்கிழமை இரவு ஒளிபரப்பான மாமா மாப்ளே தொடருக்கும் இதே கதிதான் நேர்ந்தது. அதேபோல மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பான பொண்டாட்டி தேவை நகைச்சுவை தொடரும் இதே போல் பாதியிலேயே அவசரம் அவசரம் மூடப்பட்டது.

வழக்கமாக இவருக்குப் பதில் இவர் என்று நடிகர்கள் மாறினால் ஒரு டைட்டில் கார்டைப் போட்டு விட்டு அடுத்தடுத்த வேலைகளைப் பார்ப்பார்கள். ஆனால் இந்த சீரியல்களை தூக்கிப் போட்டதற்கு என்ன காரணம் என்பதை அந்த சீரியலை இயக்கியவர்களும் சரி, நடித்தவர்களும் சரி, தயாரித்தவர்களும் சரி, சானல்காரர்களும் சரி யாருமே சொல்லவில்லை...

இப்பொழுது தொடங்கியுள்ள சில நகைச்சுவை நிகழ்ச்சிகளும் கூட மக்களிடம் அவ்வளவாக வரவேற்பினை பெற்றதாக தெரியவில்லை. எனவே விரைவில் இவையும் கூட குப்பைக் கூடைக்குப் போகலாம் என்கிறார்கள்.

நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் பஞ்சம் ஏற்பட்டால் மட்டுமே சன் தொலைக்காட்சியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். மீண்டும் தொடர் தயாரிப்பாளர்கள் ஏதாவது ஸ்லாட் பேச ஆரம்பிக்கும் பட்சத்தில் இந்த தொடர்கள் சத்தமில்லாமல் காணமல் போகவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் தொலைக்காட்சி நிர்வாகிகள்.

 

Post a Comment