தமிழ் சினிமாவில் தொடரும் டைட்டில் குழப்பம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் சினிமாவில் படங்களுக்கு தலைப்பு வைப்பதில் முறையான வழிமுறைகள் இல்லாததால் தொடர்ந்து குழப்பங்கள் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவுக்கான தலைப்பை பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு ஆகிய மூன்று இடங்களில் பதிவு செய்யலாம். புதியவர்கள் படம் எடுக்க வரும்போது முதலில் தங்கள் கம்பெனியை பதிவு செய்து மேற்கண்ட ஏதாவது ஒன்றில் உறுப்பினராக வேண்டும். இதில் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக, ஒரு லட்சம் ரூபாய் கட்டணம், சேம்பர், கில்டில் உறுப்பினராக சில ஆயிரங்கள்தான். மூன்று இடங்களிலுமே படத்தின் பெயரை பதிவு செய்ய 500 ரூபாய் மட்டும்தான் கட்டணம்.

மூன்று அமைப்புகளும் மாதம் ஒருமுறை தங்கள் அமைப்புக்கு வரும் தலைப்புகளை பரிமாறிக் கொள்ளும். இதனால் ஒரே தலைப்பு இருவருக்கு செல்லாமல் தவிர்க்கப்படும். ஆனால் இதையும் மீறி சில தவறுகள் நடந்து விடுகிறது. அதாவது ஒருவர் பதிவு செய்துள்ள தலைப்பு இன்னொருவருக்கு தேவைப்பட்டால் அதற்கு முன்னால் ஒரு சிறிய வார்த்தையை சேர்த்து புதிய தலைப்பாக பதிவு செய்வார்கள். 'கடல்' என்பது ஒருவர் பதிவு செய்த தலைப்பு என்றால் அதற்கு முன் 'நீல' என்ற வார்த்தையை சேர்த்து 'நீல கடல்' என்று பதிவு செய்வார். படத்தின் விளம்பரத்திலும், டைட்டில் கார்டிலும் 'நீல' என்பதை சிறிய எழுத்தில் போட்டு கடல் என்பதையே பெரிதாகப் பயன்படுத்துவார்கள்.

இன்னொரு தவறு, இதையே வியாபாரமாக நடத்துபவர்களால் ஏற்படுகிறது. கில்டு, மற்றும் சேம்பரில் உறுப்பினர் கட்டணம் குறைவு என்பதால் ஏதாவது ஒரு பெயரில் கம்பெனியை பதிவு செய்து நல்ல தலைப்புகளை கண்டுபிடித்து பதிவு செய்து வைத்து விடுவார்கள். ஆனால் அந்த தலைப்பில் படம் எடுக்க மாட்டார்கள். ஆண்டுதோறும் தலைப்பை புதுப்பித்து வருவார்கள். ஏதாவது பெரிய நிறுவனம் அந்த தலைப்பை கேட்கும்போது அவர்களிடம் பல லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு தலைப்பை விட்டுத் தருவார்கள். இப்படிப்பட்ட குழப்பங்களால் தலைப்பு பிரச்னைகள் உருவாகிறது.
சமீபத்திய படங்களில் இந்த பிரச்னையை சில படங்கள் சந்தித்தன. விஷால் நடிக்கும் 'சமரன்' படத் தலைப்பை ஏற்கெனவே சீமான் பதிவு செய்து வைத்துள்ளார். அதனால் 'சமரன்' இப்போது 'சமர்' ஆகியுள்ளது. 'தாண்டவக்கோனே' என்ற பெயரில் படம் தயாராகி இருக்கிறது. இப்போது விக்ரம், 'தாண்டவம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'தாண்டவம்' என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் தயாராகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'மதராசபட்டினம்' விஜய் இயக்க விஜய் நடிக்கும் படத்துக்கு 'தலைவன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதே தலைப்பை இன்னொருவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். இதற்கிடையே 'வருவான் தலைவன்' என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. கமல்ஹாசன் 'தலைவன் இருக்கின்றான்' என்ற தலைப்பை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 'கள்ளத்துப்பாக்கி' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்துக்கு 'துப்பாக்கி' என்று பெயர். இருவரில் யார் பெயரை மாற்றுவது என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'சேட்டை' ஆகியிருக்கிறது. 'மைக்செட் பாண்டி', 'பாண்டி ஒலிபெருக்கி நிலையம்' என மாறியிருக்கிறது. 'இவனும் பணக்காரன்' என்ற படத்தின் தலைப்பு 'இவனும் பாசக்காரன்' என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இதைத் தவிர பழைய பட தலைப்புகளை மீண்டும் பயன்படுத்த சட்டப்படியான தடை எதுவும் இல்லையென்றாலும் பழைய படத்தின் தயாரிப்பாளரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் விதிமுறை வகுத்துள்ளது. இதையும் மீறி பழைய படத்தின் தலைப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நிறைய படங்கள் வந்திருந்தாலும் 'எதிர்நீச்சல்', 'பில்லா ரங்கா', 'நீயா', 'மூன்று தெய்வங்கள்', 'கவுரவம்' இப்படி பழைய தலைப்புகள் மறு அவதாரம் எடுக்கத் தயாராக உள்ளன. "தலைப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அவை உடனுக்குடன் இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும். எந்த தலைப்புக்கும் ஒரு ஆண்டுக்குமேல் நீட்டிப்பு தரக்கூடாது என்பது போன்ற கடுமையான நடைமுறைகளை கொண்டுவந்தால்தான் தலைப்பு குழப்பம் தீரும். செம்மொழியான தமிழ்மொழியில் தலைப்புக்கு பஞ்சமும், குழப்பமும் நீடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது'' என்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.


 

Post a Comment