2வது மனைவியிடமிருந்து டைவர்ஸ் வாங்கித் தந்த வக்கீலையே 3வது விவாகரத்துக்கும் பிடித்த டாம் க்ரூஸ்!

|

Tom Cruise Hires The Same Lawyer He Used Nicole Split
நம்மூரில்தான் இல்லாததற்கும் பொல்லாததற்கும் ராசி பார்ப்பார்கள். ஆனால் ஹாலிவுட்டிலும் கூட அதே பஞ்சாயத்துத்தான் போல. ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ் தனது 3வது மனைவியான நடிகை கேத்தி ஹோம்ஸை விவாகரத்து செய்வதற்கு, ஏற்கனவே 2வது மனைவியான நடிகை நிக்கோல் கிட்மேனை விவாகரத்து செய்ய பயன்படுத்திய அதே வக்கீலையே பிடித்துள்ளாராம்.

ஹாலிவுட் ஹாட் ஸ்டார் க்ரூஸின் முதல் மனைவி மிமி ரோஜர்ஸ். இவருடன் 1987 முதல் 90வரை குடித்தனம் நடத்தினார் க்ரூஸ். அதன் பிறகு நடிகை நிக்கோல் கிட்மேனுடன் குடித்தனம். இது 1990 முதல் 2001 வரை நீடித்தது. அதன் பின்னர் 5 ஆண்டுகள் கேப் விட்டு, 2006ல் கேத்தி ஹோம்ஸை மணந்தார். அந்த வாழ்க்கை தற்போது முடிவுக்கு வருகிறது.

இதற்காக அவர் பிடித்துள்ள வக்கீல்தான் டென்னிஸ் வாசர். இவர்தான் கிட்மேனுக்கும், க்ரூஸுக்கும் விவாகரத்து வாங்கித் தந்தவர். தற்போது கேத்தி ஹோம்ஸ், க்ரூஸ் விவாகரத்தையும் இவரே வாங்கித் தரப் போகிறார்.

ஜூன் 28ம் தேதி விவாகரத்து கோரி கேத்தி ஹோம்ஸ், நியூயார்க் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், தனது திருமணத்தை முடித்து வைக்குமாறும், தனது 6 வயது பெண் குழந்தையான சூரியை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஆனால் எப்பாடுபட்டாவது தனது மகளை தானே வளர்க்க வேண்டும் என்பதில் க்ரூஸ் தீவிரமாக உள்ளார். இதனால் வாதத் திறமை கொண்ட டென்னிஸ் வாசரை பிடித்துள்ளார். இவர் கிட்மேன், க்ரூஸ் விவாகரத்து வழக்கின்போது மிகத் திறமையாக வாதாடி, கிட்மேன், க்ரூஸ் ஆகியோரின் வளர்ப்புப் பிள்ளைகளான கானர் மற்றும் இசபெல்லாவை க்ரூஸ் வசம் மீட்டுக் கொடுத்தவர் என்பது நினைவிருக்கலாம்.

எனவே இம்முறை 6 வயது சூரியை டாம் க்ரூஸ் பெறுவதற்கு இவர் பாடுபட் போகிறார்.

பார்க்கலாம் வெல்லப் போவது க்ரூஸா அல்லது கேத்தி ஹோம்ஸா என்று...
 

Post a Comment