சன் டிவியில் ஒளிபரப்பாகும் உறவுகள் தொடர் 800 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளதை ஒட்டி சென்னையில் பிரம்மாண்டமான விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களப்படுத்தினர்.
சேன் மீடியா நிறுவனம் அகல்யா தொடங்கி உறவுகள் வரை பல்வேறு தொடர்களை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளது. இதில் உறவுகள் தொடர் 800 எபிசோடுகளை கடந்துள்ளது. இதில் ஸ்ரீகுமார், ராஜ்காந்த், பீலிசிவம், சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதற்காக நடைபெற்ற சிறப்பு விழாவில். நட்சத்திரங்களுக்கு மியூசிகல் சேர் போட்டி நடைபெற்றது. மேடையில் சில குத்தாட்டப் பாடல்களை ஒலிபரப்பி அதற்கு நட்சத்திரங்களை ஆடச் சொன்னார்கள். பாவனா, ஸ்ரீகுமார், ராஜ்காந்த் உள்ளிட்ட சிலர் ஆடினார்கள். ஏற்கனவே `மானாட மயிலாட' என இவர்கள் ஆடியிருந்ததால் ஸ்டெப்களிலும் அசத்தினார்கள்.
விழா நடந்த தினம் தான் நடிகர் ராஜ்காந்துக்கும் பிறந்த நாள். அதற்காக திடீர் சஸ்பென்சாய் ஒரு பெரிய கேக்கை மேடைக்கு வரச்செய்து, ராஜ்காந்தையும் அழைத்து கேக் வெட்டச் செய்தார்கள். இதில் ராஜ்காந்திற்கு ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது.
சேன் மீடியா நிறுவனத்தின் முதல் தொடரான `அகல்யா' தொடரில் நடித்த மஞ்சரி சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். இப்போது முத்தாரம் தொடரில் நடித்து வரும் தகவலை சொன்ன மஞ்சரி, `இது குடும்ப உறவுகள். அதனால் தான் முதல் சீரியலில் நடித்த என்னையும் மறக்காமல் அழைத்திருக்கிறார்கள்' என்று நெகிழ்ந்தார்.
சேன் மீடியாவின் ஆஸ்தான கதாசிரியர் குமரேசன் விருதுக்காக மேடையேறியபோது கைத்தட்டல் அதிர்ந்தது. இந்த நிறுவனத்தின் தொடர்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர்கள் சிவா, ஹரி, பாலாஜியாதவ் மூவரையும் ஒரேநேரத்தில் மேடையேற்றி விருது கொடுத்தனர்.
விழாவில் உறவுகள் தொடரில் நடித்த நட்சத்திரங்கள் மட்டுமின்றி நட்பு முறையிலான நட்சத்திரங்களும், தொழில் நுட்பக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இதில் சேன் மீடியா ஏற்கனவே தயாரித்த அகல்யா, பந்தம் தொடர்களில் நடித்த கலைஞர்களும் கலந்து கொண்டது சிறப்பம்சம்.
Post a Comment