சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் நூலை அவரது பிறந்த நாளன்று வெளியிடுகிறார் திமுக தலைவர் மு கருணாநிதி.
ஜூலை 13-ம் தேதி நடக்கும இந்த விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன், நடிகர் கமல்ஹாஸன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கவிஞர் வைரமுத்து 'மூன்றாம் உலகப்போர்' என்ற தொடரை கடந்த ஓராண்டுக்கும் மேல் எழுதி வந்தார். புவி வெப்பமாதல், உலகமயமாதல் என்ற உலகத்துயரங்கள் ஒரு கிராமத்து விவசாயி வாழ்வில் ஏற்படும் தாக்கங்களை இந்த நூலில் சித்தரித்திருந்தார் வைரமுத்து.
இந்த நூல் வெளியீட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனது அனைத்து நிகழ்வுகளையும் அவரை முன்னிறுத்தி நடத்துவதே வைரமுத்துவின் வழக்கம். எந்த சூழலிலும் அதை மாற்றிக் கொண்டதில்லை.
இந்த விழாவிற்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் தலைமை தாங்கி, நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறார். நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசுகிறார்.
வாசகர் வார்த்தைகள் என்ற தலைப்பில் 10 வாசகர்கள், நூலைப் பற்றி உரையாற்றுகின்றனர். இறுதியில் கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றுகிறார். விழாவில் மூன்றாம் உலகப்போரும், புவி வெப்பமாதலும் என்ற குறும்படம் திரையிடப்பட உள்ளது.
நூல் வெளியீட்டு நாளான ஜுலை 13-ந் தேதி, கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள். எனவே விழாவிற்கு முன்னதாக அன்று காலை 8 மணிக்கு கடற்கரையில் உள்ள கவிஞர்களின் சிலைகளுக்கு, வெற்றித் தமிழர் பேரவையினரோடு சென்று மலரஞ்சலி செலுத்துகிறார். கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
Post a Comment