எனக்குள்ளே போராட்ட குணம் இருக்கு – ரா‌தி‌கா‌

|

Radhika Is Set Play

மீடியா உலகில் ‘போல்டு அன்டு பியூட்டிஃபுல்' என்ற வார்த்தைக்கு சரியான பொருத்தம் ராதிகா என்பார்கள். கிழக்கே போகும் ரயிலில் தொடங்கிய சினிமா பயணம் சின்னத்திரையில் செல்லமே வரை தொடர்கிறது. ராடான் மீடியா நிர்வாக இயக்குநர், சினிமா நடிகை, சீரியல் கிரியேட்டிவ் ஹெட் என பன்முகத்திறமையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் ராதிகா சரத்குமாரின் வெற்றிகரமான பயணம் பற்றி அவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்வோம்.

சினிமா உலகில் அடி எடுத்து வைத்து பரபரப்பான நடிகையாக பெயரெடுத்து பின்னர் சீரியல் உலகில் வாழ்க்கையை தொடங்கினேன். சித்தி முதல் தயாரிப்பு. சித்தி, அண்ணாமலை, அரசி போன்ற தொடர்கள் என்னை மையப்படுத்தியே இருந்தன. இப்போதைய செல்லமே தொடர் ஒரு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.இந்த தொடரில்தான் முதன் முறையாக என்னோடு சேர்ந்து எனக்கு அண்ணனாக ராதாரவி நடித்திருக்கிறார்.

எனக்கு நான் எடுத்துக் கொண்ட எல்லா வேடங்களும் பிடிக்கும், அதை நான் ரசித்துப் பண்ணுவதால். "செல்வி' மூணு வருஷம் பண்ணுனேன். "அரசி' ரெண்டரை வருஷம் பண்ணுனேன். ரெண்டும் வித்தியாசம்தான். நேரம் கிடைக்கும்போது பசங்க கூடதான் இருக்கேன். அவங்க ஹோம் ஒர்க் பார்ப்பது, ஸ்கூல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இதற்கே நேரம் போய்விடுகிறது.அப்புறம் நான் பிஸினஸைப் பார்க்கணும். தயாரிப்பைப் பார்க்கணும். நடிப்பைப் பார்க்கணும். பசங்களைப் பார்க்கணும். கணவரைப் பார்க்கணும். எல்லாம் இருக்கே. அதனால் ஒரு சீரியலுக்கு மேல் நடிக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை.

இயல்பிலேயே எனக்குள்ளே போராட்ட குணம் இருப்பதால் தினசரி இரவு 9.30 மணியை கடந்த 10 ஆண்டுகளாக என்னால் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. இதை கஷ்டம் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்னையை உருவாக்கி அதற்கு எதிர்பார்ப்பு உருவாக்க நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மிகப்பெரிய சிக்கல்கள் எல்லாம் வரும். அதையெல்லாம் தாங்கி சமாளிக்க வேண்டியதுதான்.

நான் நினைக்கிறது சொல்றது எல்லாமே சீரியல் மூலமா சொல்லிடுறேன். அடிப் படையில் எனக்கு "நீ அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்' என்று அட்வைஸ் பண்ணுவதெல்லாம் பிடிக்காது.எந்தத் துறையில் இருந்தாலும் குடும்பத் தலை வியா இருந்தாலும் அல்லது வேலைக்குச் சென்றாலும் சமையல்காரியாக இருந்தாலும் எந்த இடத்திலும் உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும்.

அதேபோல் கீழே விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சி நடக்க வேண்டும். உருண்டு புரண்டு அழுதுகிட்டு இருக்கமுடியாது. அதை ரொம்ப சீக்கிரமா கத்துக்கிட்டேன் என்று தனது வெற்றியின் ரகசியத்தை கூறி டிரேட் மார்க் சிரிப்பினை உதிர்த்தார் ராதிகா.

 

Post a Comment